கோவை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. உணவு, தண்ணீர் தேடிக்கொண்டு வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் விளை நிலங்கள் மற்றும் கடைகள், வீடுகளில் மற்றும் கால்நடைகளுக்கு வைத்து இருக்கும் உணவுப் பொருட்களை தின்று சூறையாடி செல்வது வாடிக்கையாகிவிட்டது. மேலும் அதனைத் தடுக்கும் விவசாய கூலித் தொழிலாளிகளை தாக்குவதும் அவ்வப்போது அரங்கேறி வருகிறது. இதனை தடுக்க விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து தமிழக அரசு மற்றும் வனத்துறையினரை வலியுறுத்தி வருகின்றனர்.
வனத்துறையினரும் பல்வேறு குழுக்கள் அமைத்து கண்காணித்து யானைகளை விரட்டும் பணிகளும் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு 3 பேரை தாக்கி கொன்ற ரோலக்ஸ் என்ற காட்டு யானையை வனத்துறையினர் மைக்ரோசி செலுத்தி பிடித்து பொள்ளாச்சி டாப்ஸ்லிப்பில் யானைகள் முகாமிற்கு கொண்டு சென்றனர். அதனை தொடர்ந்து மருதமலை அடிவார பகுதியில் ஒற்றைக் கொம்பன் காட்டு யானையும், தடாகம் சுற்று வட்டார பகுதிகளில் வேட்டையனும் மீண்டும் ஊருக்குள் வரத் துவங்கி உள்ளது.
இந்நிலையில் நேற்று மருதமலையில் மழை சாலையில் அதிகாலை 3 குட்டிகள் உடன் மூன்று காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து சாலையில் நடந்து சிறிது தூரம் சென்ற பின்னர் வனப் பகுதியை நோக்கிச் சென்றது. இதனைக் கண்ட அங்கு இருந்த பக்தர்கள் “ரோட்ல வராங்க சாமி நம்ம ஜாக்கிரதையா இருந்துக்கணும்” என்று கூச்சலிட்டனர். இதனால் வேகமாக சாலையில் ஓடி கடந்து சென்றது 3 குட்டிகளுடன் வந்த அந்த யானை கூட்டம் . மருதமலையில் சூரசம்ஹார நிகழ்ச்சியை ஒட்டி வனத் துறையினர் அப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் மேலும் யானைகள் வராமல் கண்காணித்ததால் அசம்பாவித சம்பவங்கள் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

