கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணி வாகன ஓட்டுநர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் நகரின் பல்வேறு பகுதிகளில் குப்பை தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் சுமார் 4,000கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்புத் தொகையை மாநகராட்சி நிர்வாகம் முறையாக செலுத்தாமல் மோசடி செய்வதாகக் குற்றம்சாட்டி, உக்கடம் புல்லுக்காடு பகுதியில் சுமார் 150க்கும் மேற்பட்ட வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்தி ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தின் காரணமாக, கோவையின் பல்வேறு பகுதிகளிலும் குப்பை அகற்றும் பணி முற்றிலுமாக ஸ்தம்பித்தது. இதனால் நகரின் பல இடங்களில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஓட்டுநர்கள் கூறுகையில், எங்கள் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்புத் தொகை பல மாதங்களாக முறையாக செலுத்தப்படவில்லை. இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்களது பணத்தை மோசடி செய்யும் மாநகராட்சி நிர்வாகத்தின் இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறோம். மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, எங்களது கோரிக்கைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்த திடீர் போராட்டத்தால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு ஓட்டுநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, குப்பை அகற்றும் பணி மீண்டும் நடைபெற வழிவகை செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது