Skip to content

கோவை.. அட்டகாசத்தில் ஈடுபட்ட ”ரோலக்ஸ்”….மயக்க ஊசி செலுத்திய வனத்துறை

கோவை, தொண்டாமுத்தூர் அருகே மயக்க ஊசி செலுத்திய ரோலக்ஸ் காட்டு யானை திடீரென மாயமானது. அதனை தேடும் பணியில் வனத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

இந்நிலையில் இரவில் மயக்க ஊசி செலுத்தும் செல்போன் வீடியோ வெளியாகி வன உயிரின ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. கோவை, போளுவாம்பட்டி வன சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரோலக்ஸ் என்ற அப்பகுதி மக்களால் அழைக்கப்படும் ஆண் காட்டு யானை, தொடர்ச்சியாக கிராமங்களில் நுழைந்து தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. விவசாயப் பயிர்களை சேதப்படுத்தி வரும் இந்த ரோலக்ஸ் காட்டு யானையை பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு 50 பேர் கொண்ட வனத்துறை குழுவினர் தொடர்ந்து யானையை கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கெம்பனூர் அருகே அந்தக் காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்த கால்நடை மருத்துவர் குழுவினர் மற்றும் வனத் துறையினர் ஆயத்தமான நிலையில் அந்த யானை வனப் பகுதிக்குள் புகுந்து மாயமானது.

இதை அடுத்து ட்ரோன் கேமரா மூலம் ரோலக்ஸ் யானை எங்கு உள்ளது ? என்பது கண்டறியும் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டனர். 50 க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் நான்கு குழுக்களாக பிரிந்து யானையை கண்காணித்தனர்.

அப்பொழுது வனப் பகுதியை விட்டு வெளியே வந்த காட்டு யானை ரோலக்ஸ் கெம்பனூரில் உள்ள கதிரவன் என்பவரின் தோட்டத்தில் முகாமிட்டு இருப்பது தெரிய வந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் வனசரகர் திருமுருகன் தலைமையில் வனத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று யானையின் நடமாட்டத்தை கண்காணித்தனர். யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத் துறையினர் முடிவு செய்தனர்.

இதை அடுத்து வனத்துறை மருத்துவர்கள் விஜயராகவன் ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவர் மனோரஞ்சித் ஆகியோர் வரவழைக்கப்பட்டனர்.

பின்னர் காட்டு யானையை சுற்றி வளைத்து காட்டு யானைக்கும் மயக்க ஊசி செலுத்த முயற்சி செய்தனர். அப்பொழுது இரண்டு ஊசிகள் செலுத்தப்பட்டதில், அதில் ஒரு ஊசி மட்டுமே யானை மீது பாய்ந்தது. இருப்பினும் அந்த யானை சுதாரித்துக் கொண்டு அங்கு இருந்து வேகமாக நகர்ந்து விட்டது.

ட்ரோன் கேமரா மூலமாக கண்காணித்த போது யானை தாளியூர் அருகே உள்ள யானைமடுவு வனப் பகுதிக்குள் சென்று கூட்டத்துடன் சேர்ந்து நிற்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து வனத் துறையினர் யானையின் நடமாட்டத்தை கும்கி யானைகள் உதவியுடன் கண்காணித்து வருகின்றனர். ட்ரோன் கேமரா மூலம் அதனை கண்காணித்தும் வருகின்றனர்.

யானைக்கு ஒரு ஊசி செலுத்தப்பட்டு உள்ளதால் சற்று மயக்க நிலையில் சுற்றித் திரிவதாக தெரிகிறது. ஆனால் எங்கு ? சென்று உள்ளது என்று தெரியவில்லை, இதை தொடர்ந்து நேற்று மீண்டும் யானையை பிடிப்பதற்கான பணியில் வனத் துறையினர் தொடங்கி உள்ளனர்.

இதற்கு இடையே மயக்க ஊசி செலுத்தியும் யானை தப்பியது அறிந்ததும் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இரவில் வனத்துறையினர் முகாமிட்டு இருந்த அலுவலகத்தை முற்றுகையிட வந்தனர். அவர்களிடம் பேரூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிவகுமார் மற்றும் வனத் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அங்கு இருந்து அனுப்பி வைத்தனர். அப்பொழுது பொதுமக்கள் தாமதமின்றி ரோலக்ஸ் காட்டு யானையை பிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.

மேலும் விதிமுறையை மீறி இரவு நேரம் ரோலக்ஸ் காட்டு யானைக்கு மயக்க உச்சி செலுத்தும் வனத் துறையினரின் செல்போன் வீடியோ காட்சிகள் வெளியாகி வன உயிரின ஆர்வலர்கள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!