கோவை நஞ்சுண்டாபுரத்தில் உள்ள தனியார் அப்பார்ட்மெண்டில் மூதாட்டியின் கை, கால்களை கட்டி போட்டு கொலை செய்து மர்ம நபர்கள் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்நிலையில், கொலையாளியை பிடிக்க 7 தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். கோவை நஞ்சுண்டாபுரம் ரோட்டில் பார்சன் அப்பார்ட்மெண்ட் உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள ஒரு வீட்டில் குடியிருந்தவர் கஸ்தூரி (82). இவரது கணவர் குட்டி, ஏற்கனவே இறந்துவிட்டார். மூதாட்டி கஸ்தூரியின் மகன் டாக்டர் ராம்குமார் குட்டி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இவர்களில் டாக்டர் ராம்குமார் குட்டி, கோவை பிச்சனூரில் கிளினிக் நடத்தி வருகிறார். இவர், தாய் கஸ்தூரி உடன் வசித்து வந்தார். இவர்கள் வீட்டில் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக நேபாளத்தை சேர்ந்த பெண் ஒருவர் வீட்டு வேலை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மகன் ராம்குமார் குட்டி வெளியூருக்கு சென்று விட்டார். வீட்டில் மூதாட்டி கஸ்தூரி மட்டும் தனியாக இருந்துள்ளார். மேலும், டி.வி.எஸ் நகரில் வசிக்கும் கஸ்தூரியின் மகள் தாய்க்கு தினமும் காலையில் போன்செய்து பேசுவது வழக்கம். அதன்படி, இன்று (வெள்ளி) காலையில் அவரது மகள், தாய் கஸ்தூரிக்கு போன் செய்துள்ளார். ஆனால் கஸ்தூரி, செல்போன் அழைப்பை எடுத்து பேசவில்லை.
இதனால் அவரது மகள் பக்கத்து வீட்டில் உள்ள பெண்ணிடம் தனது தாயார் செல்போனை எடுக்கவில்லை. ஏன் என்று சென்று பார்க்கும்படி கூறியுள்ளார். அந்த பெண் கஸ்தூரியின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டிற்குள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுக்கையில் கஸ்தூரி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இதுகுறித்து கஸ்தூரியின் மகளிடம் போனில் தகவல் கூறியுள்ளார். பின்னர், அவர் அளித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் போலீசார் சம்பவயிடம் வந்து பார்த்தனர். அப்போது கட்டிலில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கஸ்தூரி பிணமாக கிடந்தார். மேலும், மூதாட்டியை கட்டிப்போட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு துணை போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், போத்தனூர் உதவி போலீஸ் கமிஷனர் வசந்தராஜ் மற்றும் போலீசார் விரைந்தனர். மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். மேலும், சம்பவம் குறித்து துணை போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் விசாரணை நடத்தினார்.
மேலும், கொலை நடந்த வீடு ஏராளமான குடியிருப்பு நிறைந்த பகுதியாகும். வாசலில் செக்யூரிட்டிகள் உள்ளனர். எனவே வெளியில் இருந்து வந்த ஆட்கள் கொலையை செய்து நகையை கொள்ளை அடிக்க வாய்ப்பு இல்லை என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. மூதாட்டி கஸ்தூரியை பராமரிப்பதற்கு நியமிக்கப்பட்ட நேபாள நாட்டை சேர்ந்த பணிப்பெண் இன்று காலை வேலைக்கு வரவில்லை. இதனால், அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரை பிடித்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். கொலையாளிகளைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருப்பதாக துணை போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தெரிவித்தார். கை, கால்களை கட்டிப்போட்டு மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளையடித்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

