தஞ்சாவூா், ஆக.15- தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தேசிய கொடி ஏற்றினார். நாட்டின் 79-வது சுதந்திர தினவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கலெக்டர் பிரியங்காபங்கஜம் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மூவர்ண பலூன்களையும், வெண் : பபுறாக்களையும் பறக்க விட்டார் . இதையடுத்து அவர் திறந்தவெளி ஜீப்பில் சென்று அணிவகுப்பை பார்வையிட்டு போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
அப்போது மாவட்ட எஸ்பி ராஜாராம் உடன் இருந்தார். தொடர்ந்து கலெக்டர் சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது வாரிசுகளுக்கு கதர் ஆடை அணிவித்து கௌரவித்தார். பின்னர் முன்னாள் படைவீரர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் துறை, வருவாய் பேரிடர் மேலாண்மை துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 32 பயனாளிகளுக்கு ரூ 2.03 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் . தொடர்ந்து மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 364 அரசு அலுவலர் மற்றும் ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இதையடுத்து பள்ளி மாணவ- மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.