சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் நிதின்சாய். இவர் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் ஆங்கில இலக்கியம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். நிதின்சாயும், அவரது நண்பருமான அபிஷேக் இருவரும் பிறந்த நாள் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, சொகுசு காரான ரேஞ்ச் ரோவர் மோதியதில் , நிதின்சாய் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார். அபிசேக் படுகாயமடைந்தார்.
ஆரம்பகட்டத்தில் இது வாகன விபத்து என்று சொல்லப்பட்ட நிலையில், நிதின்சாயின் தந்தை தனது மகன் கொலை செய்யப்பட்டதாக அளித்த புகாரின்பேரில், திருமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு ஆய்வு மேற்கொண்டதில் இது விபத்து அல்ல கொலை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
நிதின்சாயின் நண்பர் வெங்கடேஷ். இவர் பிளஸ் 2 படிக்கும் மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். காதலை மாணவி ஏற்காத நிலையில், தொடர்ந்து காதலிப்பதாக கூறி வெங்கடேசன் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, மாணவி பிரணவ் என்ற இளைஞரிடம் கூறியதையடுத்து வெங்கடேஷை மிரட்டியுள்ளனர்.
இந்நிலையில், ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற பிறந்த நாள் நிகழ்ச்சியில் மாணவியை காதலிக்கும் விவகாரம் தொடர்பாக பிரணவுக்கும், வெங்கடேஷுக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது, வெங்கடேஷின் நண்பரான நிதின்சாய் மற்றும் அபிஷேக் ஆகியோர் அங்கிருந்த சொகுசு கார் ஒன்றை அடித்து நொறுக்கியுள்ளனர்.
இதையடுத்து, ஹோட்டலில் இருந்து புறப்பட்ட நிதின்சாய், அபிஷேக் இருவரும் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளனர். அப்போது, திருமங்கலத்தில் பிரணவ் மற்றும் அவரது நண்பர்கள் சொகுசு காரில் வந்து நிதின்சாய், அபிஷேக்கின் இருசக்கர வாகனத்தில் மோதியதில் நிதின்சாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சொகுசு காரை ஓட்டியது கேகே நகர் பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகரின் பேரனான சந்துரு என்பது தெரியவந்துள்ளது. பிரணவ், அவரது நண்பர்கள் சுதன், திமுக கவுன்சிலரான தனசேகரனின் பேரன் சந்துரு ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். காதல் விவகாரத்தில் நண்பருக்காக சண்டை போட்டு, கொலையில் முடிந்திருக்கும் இச்சம்பவம் அப்பகுகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.