கோவையில் கடுமையான போதையில் கல்லூரி மாணவர்களை சக நண்பர்களே போதை ஊசி செலுத்தி கொலை செய்து வீசிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை வெள்ளலூரில் புதிதாக கட்டப்பட்டு வந்த பேருந்து நிலைய கட்டடம் நிறுத்தப்பட்டு, அங்கு லாரிகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு வருகிறது. மேலும் காலை நேரங்களில் அப்பகுதி மக்கள் நடைப்பயிற்சிக்கும் சென்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த 11ம் தேதி அந்த பேருந்து நிலைய கட்டடத்திற்குள் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக, போத்தனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு வந்து பார்த்தபோது கை, கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் ஆண் சடலம் இருந்தது தெரியவந்தது. அதனை போலீசார் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஐந்து தனிப்படைகள் அமைத்து மர்ம நபர்களை தேடி வந்தனர். முதல் கட்டமாக உயிரிழந்த இளைஞர் உடலில் பச்சை குத்தியிருந்த அடையாளங்களைக் கொண்டு அவர் யார் என்பது குறித்தான விசாரணையை தீவிரப்படுத்தினர்.
தொடர் விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தை சேர்ந்த சூர்யா (21) என்பதும், இவர் சென்னையில் உள்ள பல்கலைக்கழகத்தில் பயின்று வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சூர்யா செல்போன் எண்ணை வைத்து அவர் யார் யாரிடம் பேசினார் என்பது குறித்த விவரங்களை சேகரித்தனர். அதன் அடிப்படையில் சூர்யாவுடன் கோவையில் படித்த சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த மதேஷ் (21) என்பவரை போலீசார் பிடித்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது. அதில் கொலை செய்யப்பட்ட சூர்யாவும், மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த நண்பரான கார்த்திக் (21) என்ற இளைஞரும் கோவையில் உள்ள கல்லூரியில் படித்து வந்தனர். அப்போது கார்த்திக் கோவையை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்துள்ளார். இதனிடையே சூர்யாவிற்கு சென்னை பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்ததால், அவர் கோவையில் கல்லூரியில் படிப்பை இடைநிற்றல் செய்து விட்டு சென்னை சென்றார். கார்த்திக் மட்டும் கோவை பேரூர் போஸ்டல் காலணி பகுதியில் அறை எடுத்து தங்கி படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த வாரம் வியாழக்கிழமை கார்த்திக், சூர்யாவை கோவைக்கு அழைத்துள்ளார். அதன்படி கோவை வந்த சூர்யா, கார்த்திக், மற்றும் கார்த்திக்கின் நண்பர்களான நரேன் கார்த்திக் (20), மாதேஷ் (21), முகமது ரபீக் (21) பேரூர் அறையில் ஒன்றாக அமர்ந்து போதை ஊசி செலுத்திக் கொண்டும், மது அருந்திகொண்டும் இருந்துள்ளனர். அப்போது போதையில் சூர்யா, கார்த்திக்கின் காதலியுடன் வீடியோ காலில் அடிக்கடி பேசி வருவது குறித்தும், அவரது அந்தரங்க புகைப்படங்களை செல்போனில் வைத்திருப்பதும் குறித்தும் கூறி செல்போனை காட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக், அங்கிருந்த போதை ஊசியை எடுத்து சூர்யாவின் கழுத்தில் கார்த்திக் குத்தியுள்ளார். இதில் மயங்கி விழுந்த சூர்யாவின் முகத்தில் தலையணையை வைத்து அமுக்கிய கார்த்திக் மேலே ஏறி அமர்ந்துள்ளார். இதில் சூர்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால் அனைவருமே கடுமையான போதையில் இருந்ததால் சூர்யா இறந்தது யாருக்கும் தெரியவில்லை. இந்நிலையில் அனைவரும் காலையில் எழுந்து பார்த்த போது சூர்யா சடலமாக இருந்துள்ளார். இதையடுத்து என்ன செய்வது என தெரியாமல் அல்லாடிய இளைஞர்கள் இரவு வரை காத்திருந்தனர். பின்னர் மாதேஷ் மூலம் ரேபிட்டோ கார் புக் செய்து சூர்யாவின் உடலை துணியில் கட்டி காரில் எடுத்துச் சென்றுள்ளனர். இறுதியாக வெள்ளலூர் பகுதியில் கைவிடப்பட்ட பேருந்து நிலைய கட்டிடத்தில் கை, கால்களை கட்டி உடலை வீசிச் சென்றதும் தெரியவந்ததும். இதையடுத்து மதுரை சேர்ந்த கார்த்திக் (21), கோவையை சேர்ந்த நரேன் கார்த்திக், மாதேஷ், முகமது ரபீக் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கோவையில் கடுமையான போதையில் கல்லூரி மாணவர்களை சக நண்பர்களே போதை ஊசி செலுத்தி கொலை செய்து வீசிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.