திருச்சி திருவானைக்காவல் ஐந்தாம் பிரகாரத்தை சேர்ந்தவர் காஜா மைதீன் ( 63). சமையல் தொழிலாளி. இவர்
நேற்று மாலை திருச்சி சத்திரம் பஸ் நிலையம் வந்தார், அங்கு ஒரு டீக்கடை முன் நின்றிருந்தபோது 4 பேர் அங்கு வந்து காஜா மைதீனிடம் இருந்த பையையும், ரூ, 1,400ஐயும் பறித்துக்கொண்டு ஓடினர்.
காஜா மைதீன் அவர்களை துரத்தினார். அப்போது 2 பேர் பிடிபட்டனர். அவர்களை சத்திரம் பஸ் நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் ஒப்படைக்க இழுத்து வந்தார். அப்போது அபிஷேக் என்ற வாலிபர் காஜா மைதீனிடம் தகராறு செய்து அவரை அரிவாளால் வெட்டி சரமாரியாக தாக்கினார்.
அப்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, பிரேம்
ஆனந்த் ஆகியோர் அபிஷேக்கை மடக்கி பிடிக்க முயன்றனர். இதனால் எஸ்எஸ்ஐகள் மீது ஆத்திரமடைந்த அபிஷேக் எஸ்எஸ்ஐகளையும் சரமாரியாக வெட்டினார். ஆனாலும் ராஜா, அரிவாளை அவனிடம் இருந்து பறித்தார். அப்போது அங்கு வந்த இன்னொரு சிறப்பு எஸ்ஐயான என். சந்தான கிருஷ்ணன், அபிஷேக்கை தப்பி ஓட முடியாமல் பிடித்துக்கொண்டார்.
சினிமா காட்சி போல இந்த சம்பவம் நடந்து கொண்டிருந்தபோது பஸ் நிலையத்தில் இருந்த பொதுமக்கள் சிலரும் போலீசாருக்கு உதவினர். பொதுமக்கள் அபிஷேக்கை கீழே தள்ளி தாக்கினர்.பின்னர் காஜா மைதீன் மற்றும் போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அபிஷேக்கிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவருடன் வந்தவர்கள் காளியம்மன்
கோவில் தெருவை சேர்ந்த குரு (20), காந்திமார்க்கெட் தவ்பிக் (19), அரியமங்கலத்தை சேர்ந்த அபுபக்கர் சித்திக் (19)என்பது தெரியவந்தது. அதில் 2பேரைபோலீசார் பிடித்தனர். இன்னொருவரை தேடி வருகிறார்கள்.இது குறித்து கோட்டைபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் என். சந்தான கிருஷ்ணனை நேரில் அழைத்து அவரது துணிச்சல் மிக்க செயலை பாராட்டி, பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.