திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த குனிச்சி பெரியார் வட்டம் பகுதியில் பெண்கள் ஒன்றிணைந்து முல்லை சுய உதவி குழு உருவாக்கியுள்ளனர்.
இதில் தலைவராக மகேஸ்வரி என்பவரும் செயலாளராக விஜயா உட்பட 12 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைத்துள்ளனர்.
இந்த நிலையில் இவருடைய குழு கணக்கு திருப்பத்தூரில் உள்ள இந்தியன் வங்கியில் உருவாக்கப்பட்டு குழுவை நடத்தி வந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து வங்கியில் 13 லட்சத்து 20ஆயிரம் கடனாக பெற்று 12 பேருக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பிரித்து எடுத்துக் கொண்டனர்.
இதனை 24 மாதங்கள் கட்ட வேண்டும் என்ற அடிப்படையில் மாதாமாதம் கட்டி வந்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு அந்த குழுவில் உறுப்பினராக உள்ள ராஜலட்சுமி என்பவர் நான் தினந்தோறும் திருப்பத்தூருக்கு சென்று வருகிறேன் எனவே மாதமாதம் கட்ட வேண்டும் குழுத்தொகையை

என்னிடம் கொடுங்கள் நான் கட்டி விடுகிறேன் எனக்கூறி நோட்டுப் புத்தகங்கள் கணக்கு வழக்குகள் என அனைத்தையும் என இவரே பராமரித்துக் கொண்டு வந்துள்ளார்.
வங்கியில் கடன் பெற்ற 13 லட்சத்தில் 9 லட்சம் கட்டப்பட்ட நிலையில் நான்கு லட்ச ரூபாய் கட்டாமல் இருந்து வந்துள்ளார்
பின்னர் குழுவில் மாதாமாதம் வசூலிக்க படும் பணத்தை வங்கியில் போடாமல் மற்ற உறுப்பினர்களை ஏமாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் நான்கு லட்சம் பணம் மற்றும் உறுப்பினர்களின் சேமிப்பு பணம் உட்பட சுமார் 10 லட்சம் பணத்தை சுருட்டிக்கொண்டு ராஜலட்சுமி தனது குடும்பத்துடன் தலைமறைவானார்.
இதன் காரணமாக குழுவில் உள்ள மற்ற உறுப்பினர்களின் வங்கி கணக்குகளை வங்கி நிர்வாகம் முடக்கி உள்ளது. வங்கி கணக்கு முடுக்கப்பட்டதால் குழு உறுப்பினர்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
இதன் காரணமாக குழு உறுப்பினர்கள் பணத்தை ஏமாற்றிச் சென்ற ராஜலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் வங்கி கணக்கு முடுக்கப்பட்டதை ரிலீஸ் செய்ய வேண்டும் எனக் கூறி எஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் கந்திலி காவல் நிலையத்தில் குழு உறுப்பினர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது..

