கோவையில் இருந்து இருகூர் வழியாக சிங்காநல்லூர் செல்லும் ரயில் பாதையில் சூர்யா நகர் என்ற பகுதியில் கடந்த 22 ஆம் தேதி தண்டவாளத்தில் மரக்கட்டைகள் இருப்பதாக ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்தது. இதுகுறித்து சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே காவல்துறையினர் அந்த கட்டைகளை அகற்றி எடுத்துச் சென்றதுடன், இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில், ரயில் தண்டவாளத்தில் கட்டையை வைத்தவர்கள், ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த தினேஷ், கோகுல் கிருஷ்ணன், சசிகுமார், கார்த்திக், புல்லுக்காட்டைச் சேர்ந்த நாகராஜ் மற்றும் சேலத்தைச் சேர்ந்த வேதவன் ஆகியோர் என்பது தெரிய வந்தது. இவர்கள் ஆறு பேரையும் ரயில்வே காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 6 பேரும் கோவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், இவர்களுக்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள், எதற்காக இந்த சதி செயலில் ஈடுபட்டனர் என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.