கோவை – பில்லூர் 2 கூட்டு குடிநீர் திட்ட குழாய் இரண்டாவது முறையாக உடைப்பு : சாலையில் வெள்ளம் போல் சென்ற குடிநீர் – சரி செய்யும் பணியில் மாநகராட்சி தீவிரம்…
கோவை நகருக்கு பில்லூர், சிறுவாணி, ஆழியார் ஆகியவற்றின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை, திட்டம் குடிநீர் குழாய் மற்றும் சாலை அமைப்பதற்கு போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனால் நகரில் பெரும்பாலான பகுதிகளுக்கு 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் சில பகுதிகளில் 15 நாட்களுக்கு மேல் ஆகியும் குடிநீர் வினியோகம்

செய்யப்படுவது இல்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று அதிகாலை பில்லூர் குடிநீர் 2-வது திட்டத்தில் நகருக்கு வினியோகம் செய்யப்படும் பிரதான குழாயில் வடக்கு மண்டலம் சக்தி சாலை சரவணம்பட்டி அம்மன் நகர் அருகே திடீரென்று உடைப்பு ஏற்பட்டது. இதனால் குழாயில் இருந்து தண்ணீர் நீரூற்று போல் பெருக்கெடுத்து ஓடி அங்கு உள்ள சாலையில் பாய்ந்தது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் குடிநீர் வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் விரைந்து சென்று தண்ணீரை நிறுத்தினர். இதனால் குடிநீர் வீணாவது தடுக்கப்பட்டது. ஆனாலும் ஊழியர்கள் வருவதற்கு முன்னதாகவே அதிக அளவு குடிநீர் வீணானது.
ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே போன்று உடைப்பு ஏற்பட்டு மாநகரில் பல்வேறு பகுதிகளில் குடிநீர் வினியோகம் தடைப்பட்டது.
இதன் காரணமாக பில்லூர் 2-வது குடிநீர் திட்ட பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் இன்றும் தடைபட்டு உள்ளது.
இது குறித்து கோவை மாநகராட்சி அதிகாரிகள் கூறும் போது….
பில்லூர் 2-வது திட்டம் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளதால், அந்த திட்டத்தில் குடிநீர் வினியோகம் செய்யப்படும் சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், பீளமேடு, சவுரிபாளையம், ஆவாரம்பாளையம், கணபதி, காந்திபுரம் ரத்தினபுரி, சித்தாபுதூர், உக்கடம் பகுதிகளில் குடிநீர் வினியோகம் இன்று தடைபட்டு உள்ளதாகவும், பில்லூர் இரண்டாவது குடிநீர் திட்டத்தின் கீழ் சுமார் 1000 மில்லி மீட்டர் விட்டம் அளவிலான பிரதான குழாய் உடைப்பு ஏற்பட்டு உள்ளதை சீர் செய்யும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும், விரைவில் உடைப்பு சரி செய்யப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏற்கனவே குடிநீர் வினியோகம் தாமதப்பட்டு வரும் நிலையில், பில்லூர் குடிநீர் குழாய் இரண்டாவது முறையாக மீண்டும் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வினியோகத்தில் மேலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும், தொடர்ந்து அப்பகுதிகளில் குழாய் உடைப்பு ஏற்படுவதால் மாற்று ஏற்பாடு செய்து தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

