Skip to content

கர்நாடக பெண்ணின் அபூர்வ ரத்தவகைக்கு CRIB என பெயர் சூட்டல்

  • by Authour

கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, உலகில் வேறு எங்கும் அடையாளம் காணப்படாத ஒரு புதிய ரத்த வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் கோலாரில் உள்ள ஒரு மருத்துவமனையில் 38 வயது பெண் ஒருவர் இதய அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது ரத்தம் பரிசோதிக்கப்பட்டபோது,  அவரது ரத்தவகை  இதுவரை கண்டறியப்படாத புதுவகை ரத்தம் என்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.   அவரது ரத்த வகை O+ ஆகும். இது மிகவும் பொதுவான ரத்த வகையாகும். இருப்பினும், கிடைக்கக்கூடிய O பாசிடிவ் ரத்த அலகுகள் எதுவும் அவருக்கு பொருந்தவில்லை.

மருத்துவமனை இதன் மாதிரியை  மேல் ஆய்வுக்காக  பெங்களூரு ரோட்டரி டிடிகே ரத்த மையத் திற்கு அனுப்பியது. “மேம்பட்ட செரோலாஜிக்கல் நுட்பங்களைப் பயன்படுத்தி, ஆய்வு செய்த குழு அவரது ரத்தம் ‘பேன்ரியாக்டிவ்’ என்றும், அனைத்து சோதனை மாதிரிகளுடனும் பொருந்தவில்லை என்றும் கண்டறிந்தது. மேலும் மருத்துவர்களின் முயற்சியால், ரத்தமாற்றம் தேவையில்லாமல் அவரது அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டது’ என்று ரோட்டரி பெங்களூரு டி.டி.கே ரத்த மையத்தைச் சேர்ந்த டாக்டர் அங்கித் மாத்தூர் கூறினார்.

மேலும் கூறும் போது, “கோலார் பெண்ணின் குடும்பத்தினரின் ரத்த மாதிரிகள் இங்கிலாந்தின் பிரிஸ்டலில் உள்ள சர்வதேச ரத்தக் குழு குறிப்பு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. பத்து மாத விரிவான ஆராய்ச்சி மற்றும் மூலக்கூறு பரிசோதனைக்கு பிறகு இது வரை அறியப்படாத ரத்தக் குழு ஆன்டிஜென் கண்டுபிடிக்கப்பட்டது.

இது குரோமர் ரத்தக் குழு அமைப்பின் ஒரு பகுதியாகும், மேலும் அதன் தோற்றத்தை அங்கீகரிக்கும் விதமாக, அதிகாரப்பூர்வமாக கிரிப் (CRIB) என்று பெயரிடப்பட்டுள்ளது, ‘CR’ என்பது ‘குரோமர்’ என்பதைக் குறிக்கிறது மற்றும் ‘IB’ என்பது ‘இந்தியா’, ‘பெங்களூரு’ என்பதைக் குறிக்கிறது. ஜூன் 2025 ல் இத்தாலியின் மிலனில் நடைபெற்ற சர்வதேச ரத்தமாற்ற சங்கத்தின் பிராந்திய மாநாட்டில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது’’ என்றார்.

error: Content is protected !!