கத்தாரில் நடைபெற்று வரும் 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் கலீபா சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடைபெற்ற 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் அரை இறுதி ஆட்டங்களில் தோல்வி அடைந்த குரோஷியா-மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 7வது நிமிடத்தில் குரோஷியா வீரர் ஜோஸ்கோ குவார்டியோல் தமது அணிக்கான முதல் கோல் அடித்தார். பதிலுக்கு 9வது நிமிடத்தில் மொராக்கோ வீரர் அக்ரஃப் தாரி ஒரு கோல் அடித்ததால் ஆட்டம் சமநிலையில் இருந்தது. இதையடுத்து 42வது நிமிடத்தில் குரோஷியா வீரர் மிஸ்லாவ் ஒர்சிக் தமது அணிக்கான 2வது கோலை அடித்தார். இதனால் முதல் பாதி ஆட்ட முடிவில் குரோஷியா 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் எதுவும் அடிக்கவில்லை. கூடுதல் நேர ஆட்ட முடிவிலும் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. இதனால் 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற குரோஷியா இந்த உலக கோப்பை தொடரில் 3வது இடத்தை பிடித்தது.