Skip to content

பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு 5 மாதத்தில் தண்டனை: போலீசாருக்கு டிஜிபி பாராட்டு

கோயம்புத்தூர் – திருப்பதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த  பிப்ரவரி மாதம் 6ம் தேதி  திருப்பூரிலிருந்து ஒரு கர்ப்பிணி பெண்  ஏறி உள்ளார்.  சித்தூர் செல்ல அவர் பெண்கள் கம்பார்ட்மென்டில் பயணம் செய்துகொண்டிருந்த போது, வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 27 வயதான ஹேமராஜ் என்பவர், அந்த பெட்டியில் புகுந்து கர்ப்பிணியை  பாலியல் வன்கொடுமை செய்து , ஜோலார்பேட்டை அருகே ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து அந்த  கர்ப்பிணியை தள்ளிவிட்டுவிட்டார்.

இது தொடர்பாக கடந்த 07.02.2025 அன்று ஜோலார்பேட்டை ரயில்வே காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது அதே நாளில் குற்றவாளி ஹேமராஜ் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

இவ்வழக்கில் விசாரணை அதிகாரிகள் விரிவான விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் 47 நாட்களில் இறுதி அறிக்கை தயார் செய்யப்பட்டு, திருப்பத்தூர்  மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த வழக்கு 02.05.2025 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து காவல்துறை மற்றும் குற்ற வழக்குகள் தொடர்வு துறை ஆகியவற்றால் வழக்கின் நீதிமன்ற விசாரணையை விரைவுப்படுத்த உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த 11.07.2025 அன்று ஹேமராஜ் குற்றவாளி” என  மாவட்ட அமர்வு நீதிமன்றத்தால்
தீர்ப்பளிக்கப்பட்டது. பின்னர், 14,07.2025 அன்று அவருக்கு “சாகும் வரை ஆயுள் தண்டனை”
விதிக்கப்பட்டது.
இவ்வழக்கில் அர்ப்பணிப்போடு செயல்பட்டு குற்றவாளிக்கு ஐந்து மாதங்களுக்குள் தண்டனை கிடைக்க பணியாற்றிய விசாரணை அதிகாரிகள் மற்றம் குழுவினரை பாராட்டும் விதமாக, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்  சங்கர் ஜிவால்,இன்று ( செவ்வாய்) சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில் நேரில் அழைத்து பாராட்டுச் சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

error: Content is protected !!