சூப்பர் ஸ்டார் ரஜினியின் 173-வது படமான தலைவர் 173 குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ரஜினி ஜெயிலர் 2 படத்தில் கவனம் செலுத்தி வருகிறார், அது 2026 ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தலைவர் 173 இயக்குநர் யார் என்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் கமல் ஹாசன் தயாரிப்பாளராகவும், சுந்தர் சி இயக்குநராகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் நவம்பர் 13 அன்று சுந்தர் சி “எதிர்பாராத மற்றும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகள்” காரணமாக விலகியதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அதனை தொடர்ந்து, கமல் ஹாசனும் “நல்ல கதை அமையும் வரை இயக்குநரை தேடுகிறோம்” என்று கூறியுள்ளார். சுந்தர் சி கதை ரஜினிக்கு திருப்தி கொடுக்காததால் அவர் விலகியதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், சமூக வலைதளங்களில் இயக்குநர் யார் என விவாதங்கள் நடக்கும் போது, புதிய தகவல் கசிந்துள்ளது. அந்த தகவலை கேட்டவுடன் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு ஏற்கனவே இருந்ததை விட அதிகமாகியுள்ளது.
நடிகர் தனுஷ் சமீபத்தில் ரஜினிகாந்திடம் கதை நாரேட் செய்ததாகவும், இது தலைவர் 173-க்கான திட்டமாக இருக்கலாம் என்றும் தெரிகிறது. தனுஷ், இயக்குனராக பவர் பாண்டி படத்தில் வெற்றி பெற்றவர். காலா (2018) பட நேரத்தில் தனுஷ் ரஜினிக்கு ஸ்கிரிப்ட் சொன்னதை அடிப்படையாகக் கொண்டு, அந்த கதையை மேம்படுத்தி இயக்கலாம் என்று வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த கூட்டணி இணைந்தால், தனுஷ் இயக்கம், ரஜினி நடிப்பு, கமல் ஹாசன் தயாரிப்பு என முதல் முறை மூன்று பேரின் ஒத்துழைப்பு அமையும்.இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் “தனுஷ் இயக்கம் உண்மையாக வேண்டும்” என்ற போஸ்ட்கள் பரவியுள்ளன. ரஜினி-தனுஷ் உறவு நெருக்கமானது என்பதால், இந்த திட்டம் விரைவில் உறுதியாகலாம் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

