காவல் துணைக் கண்காணிப்பாளரின் வாகனம் பறிக்கப்பட்டதாக எழுந்த விவகாரத்தில், காவல் துறை நடத்தை விதிகளை மீறியதாக டிஎஸ்பி சுந்தரேசனை பணியிடை நீக்கம் செய்யுமாறு, மத்திய மண்டல ஐ.ஜி.க்கு, டிஐஜி பரிந்துரை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி சுந்தரேசனின் வாகனத்தை பறித்துக் கொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. வீட்டில் இருந்து டிஎஸ்பி அலுவலகத்துக்கு நடந்து சென்ற காட்சிகள் சமூகவலைதளங்களில் வௌியாகியது.
இதற்கிடையில் நிருபர்களிடம் பேட்டியளித்த டிஎஸ்பி… , தான் நேர்மையாகப் பணியாற்றுவதால் தொடர்ந்து உயரதிகாரிகள் நெருக்கடி தருவதாகவும், வளைந்து கொடுத்து போகுமாறு எஸ்.பி. கூறியதாகவும் புகார் தெரிவித்திருந்தார். இவரின் புகார்களுக்கு மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் மறுப்பு தெரிவித்திருந்தார்.
மத்திய மண்டல ஐ.ஜி. அலுவலகத்தில் விசாரித்தபோது, ‘‘டிஐஜி தாக்கல் செய்துள்ள அறிக்கை, டிஜிபிக்கும், உள்துறைச் செயலருக்கும் அனுப்பி வைக்கப்படும். டிஎஸ்பி மீதான சஸ்பெண்ட் குறித்து உள்துறைச் செயலர் முடிவெடுப்பார்’’ என்றனர்.
இந்நிலையில் மயிலாடுதுறையில் தன்மீது சுமத்தப்பட்ட குற்றசாட்டுகளுக்கு மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் விளக்கம் அளித்துள்ளார். எனது உயிருக்கு ஆபத்துள்ளது. மன அழுத்தத்தில் உள்ளேன், மற்ற காவலர்களை போன்று தவறான (தற்கொலை) முடிவுகளை எடுக்க மாட்டேன், எனது பிரச்சனையை மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும். முதலமைச்சர் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட வேண்டும் என டிஎஸ்பி கோரிக்கை வைத்துள்ளார்.