Skip to content
Home » மாற்றுத்திறனாளி கோரிக்கை….. உடனடி நடவடிக்கை எடுத்த அரியலூர் கலெக்டர்

மாற்றுத்திறனாளி கோரிக்கை….. உடனடி நடவடிக்கை எடுத்த அரியலூர் கலெக்டர்

  • by Senthil
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 384 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவரால் பெறப்பட்டது.  இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
முன்னதாக தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான உணவுத்திருவிழா போட்டிகளில் வெற்றிபெற்ற ஜெயங்கொண்டம் வட்டாரம், உட்கோட்டை ஊராட்சி, ஆனந்தம் மகளிர் சுய உதவிக்குழுவிற்கு முதல் பரிசாக ரூ.5,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழையும், திருமானூர் வட்டாரம், மஞ்சமேடு ஊராட்சி, உதயம் மகளிர் சுய உதவிக்குழுவிற்கு இரண்டாம் பரிசாக ரூ.4,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழையும், ஜெயங்கொண்டம் வட்டாரம், படநிலை ஊராட்சி, நேரு மகளிர் சுய உதவிக்குழுவிற்கு மூன்றாம் பரிசாக ரூ.3,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழையும், மேலும் இலந்தைக்கூடம் ஊராட்சி ஜான்சி மகளிர் சுயஉதவிக்குழு, தேவமங்கலம் ஊராட்சி டாக்டர் ராமமிர்தம் அம்மையார் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சிறப்பு பரிசாக தலா ரூ.2,500 மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும், இதேபோன்று திருமானூர் ஊராட்சி வைரம் மகளிர் சுய உதவிக்குழு, திருக்களப்பூர் ஊராட்சி செவ்வாழை மகளிர் சுய உதவிக்குழு மற்றும் ஆண்டிமடம் ஊராட்சி ஈஸ்வரி மகளிர் சுய உதவிக்குழு ஆகிய 3 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.2,000 பரிசுத்தொகையும், பாராட்டுச் சான்றிதழ்களும் என மொத்தம் ரூ.23,000 பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து, இக்கூட்டத்தில் மூன்று சக்கர மாற்றுத்திறனாளி சைக்கிள் வேண்டி மனு அளித்த  மாற்றுத்திறனாளிக்கு உடனடியாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலரிடம் அறிவுறுத்தி மூன்று சக்கர மாற்றுத்திறனாளி சைக்கிளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் .ம.ச.கலைவாணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரணி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் லெட்சுமணன், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) பவானி மற்றும் அனைத்துதுறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!