Skip to content

மத்திய அரசின் திட்ட செயல்பாடு, கோவை எம்.பி. தலைமையில் ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் தலைவரும், கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினருமான கணபதி ப. ராஜ்குமார் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், கோவை மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் முக்கிய திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

குறிப்பாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள், பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டப்பணிகளின் தற்போதைய நிலை, பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், சாலை மேம்பாட்டுப் பணிகள் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பயனாளிகளுக்கு எரிவாயு உருளைகள் இணைப்பு வழங்கும் திட்டத்தின் முன்னேற்றம் ஆகியவை குறித்து அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

வேளாண்மைத் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம், பிரதம மந்திரி நீர்பாசன திட்டம், ஒருங்கிணைந்த நீர்வடிப் பகுதி மேலாண்மை திட்டம், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் துறை அதிகாரிகள் கலந்து கொண்டு, தங்கள் துறைகளின் கீழ் நடைபெற்று வரும் திட்டப்பணிகளின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால திட்டமிடல் குறித்து விளக்கமளித்தனர். திட்டப்பணிகளை விரைந்து முடித்து, அதன் பயன்கள் மக்களை சென்றடைய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைவர் கணபதி ப. ராஜ்குமார் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார், இக்கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், கூடுதல்  ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!