பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 117-வது பிறந்தநாள் விழா: அரசியல் கட்சியினர் மரியாதை செய்தனர். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், திமுகவின் முன்னோடித் தலைவருமான பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 117-வது பிறந்தநாள் இன்று மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரியலூர் பேருந்து நிலையம் முன்பாக உள்ள பேரறிஞர் அண்ணாவின்
முழுவுருவச் சிலைக்கு திமுக மற்றும் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அரியலூர் நகர திமுக சார்பில் ஊர்வலமாக வந்த அக்கட்சியினர் அண்ணா அவர்களது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பின், தமிழகத்தை தலைகுனிய விட மாட்டோம் எனும் உறுதிமொழியை அவரது உருவச்சிலை முன்பு எடுத்துக் கொண்டனர். இதேப்போல அதிமுக சார்பில் முன்னாள் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் தலைமையில் ஊர்வலமாக வந்த அக்கட்சியினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.