முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 5ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை ஒட்டி கலைஞர் நினைவிடத்தில் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அவற்றில் … சாதனை …சாதனை ..சாதனை.. அதுதான் முக ஸ்டாலின் என பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதனைதொடர்ந்து இன்று காலை சென்னை , மெரினா கடற்கரையில் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செய்தார்.
2021-ம் ஆண்டு மே மாதம் இதே நாளில், “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்..” என்ற சொல்லை உச்சரித்து, முதல்-அமைச்சர் அரியணை . ஏறினார், மு.க.ஸ்டாலின். அந்தத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மேடை பேச்சுகளில் எல்லாம், கடந்த 55 ஆண்டுகளில் தமிழ்நாடு கண்ட வளர்ச்சி, மாற்றங்களை ‘திராவிட மாடல்’ என்றும், அதன் நீட்சிதான் தனது ஆட்சி என்றும் கூறிவருகிறார். கடந்த 4 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் நிறைய திட்டங்கள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில், முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம், அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசமாக மகளிர் விடியல் பயண திட்டம், மாதந்தோறும் ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை திட்டம், ‘புதுமைப் பெண்’ திட்டம் மூலம் உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை,
தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தின் மூலம் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை, உயர் கல்விக்கு வழிகாட்டும் ‘நான் முதல்வன்’ திட்டம், வீடு தேடி சென்று சிகிச்சை அளிக்கும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடன் உதவி, விபத்தில் சிக்குபவர்களுக்கு உடனடி சிகிச்சை உதவிக்கு இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 திட்டம், வீடு அற்றவர்களுக்கு கலைஞரின் கனவு இல்லத் திட்டம் ஆகியவை முக்கியமானவை.
2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 505 அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன. அதில், குறிப்பிடப்படாத சில
அறிவிப்புகளையும் ஆட்சிக்கு வந்த 4 ஆண்டு காலத்தில் தி.மு.க. அரசு நிறைவேற்றி இருக்கிறது. ஏற்கனவே, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 10 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் இருந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று வழக்காடி வெற்றி பெற்றதை தி.மு.க. அரசு சாதனையாக கருதுகிறது. தற்போது, பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டே இருக்கும் நிலையில், அதை மனதில் வைத்தே தி.மு.க. அரசு செயல் திட்டங்களை தீட்டிவருகிறது. புதிய திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.