அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு திருச்சி மாவட்டம் கல்லகம் பகுதியைச் சேர்ந்த வசந்த் (28) எனும் இளைஞர், குடிபோதையில் கீழே விழுந்து, சிகிச்சை பெற வந்துள்ளார். அப்போது பணியில் இருந்த அரசு மருத்துவர்களை சிகிச்சை செய்ய விடாமலும், தகாத வார்த்தைகளால் பயன்படுத்தியும் திட்டி மிரட்டல் விடுத்துள்ளார். இருப்பினும் மருத்துவர்கள் அந்த இளைஞனின் காயத்துக்கு

சிகிச்சை அளித்துள்ளனர். ஆனாலும் தொடர்ந்து மருத்துவர்களை திட்டி, மிரட்டல் விடுத்ததால் மருத்துவர்களின் புகாரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து இளைஞர் வசந்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் நல சங்கத்தினர் அரியலூர் மருத்துவக் கல்லூரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, பொதுமக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சைகளை அளித்து வரும் எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். இரவு நேரங்களில் குடிபோதையில் வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் எங்களது பணியை செய்ய விடாது தடுத்து மிரட்டல் விடுப்பது வருத்தமளிக்கிறது. இதனால் மருத்துவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் அரியலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இரவு நேரங்களில் காவல்துறை சார்பில் ஒரு காவலர் மட்டுமே பணியில் இருப்பது போதாது. மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு என்று தனியே புறக்காவல் மையம் அமைத்து, கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

