சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் இருப்பின் அதற்கான அறிவிப்புகள் அதிகாரப் பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும். அவைதான் உண்மையான அறிவிப்புகள் என்றும், பிற சமூக ஊடகங்களில் வெளிவரும் வேலை வாய்ப்பு அறிவிப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் மெட்ரோ ரயில் நிறுவனம் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு பணியாளர்களை தேர்வு செய்யும் பணி, எந்தவொரு தனி மனிதருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ வழங்கப்படவில்லை. பணியாளர்கள் தேவையின்போது அதற்கான முன் அறிவிப்பு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அதிகாரப் பூர்வ இணையதளமான http://chennaimetrorail.org/careers என்ற இணையதள முகவரியில் வெளியிடப்படும். இதைத் தவிர தமிழ், ஆங்கில நாளிதழ் மற்றும் வேலைவாய்ப்பு செய்தித்தாள்களில் (Employment News) அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன.
விண்ணப்பதாரர்களுக்கான அனைத்து தகவல்தொடர்புகளும் உறுதிப்படுத்தக்கூடிய CMRL மின்னஞ்சல் முகவரியில் இருந்தோ அல்லது CMRL-இன் அதிகாரப்பூர்வ லெட்டர் ஹெட்டில் இருந்தோ மட்டுமே வரும். Rediff mail, Yahoo, Gmail போன்ற இணைய முகவரிகள், மொபைல் எண்கள், WhatsApp அல்லது போலியான CMRL லெட்டர் ஹெட் அல்லது முகமைகள் மூலமாகத் தொடர்பு கொள்ளப்பட்டால் அது அதிகாரப்பூர்வமற்றது.
எனவே, வேலை வாய்ப்புக்குத் தகுதியுடையவர்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரப் பூர்வ இணையதளத்தில் வெளிவரும் அறிவிப்புகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இதைத் தவிர வேறு எந்தவொரு இணையதளம் மற்றும் வாட்ஸ்அப்பில் (Whatsapp) வெளிவரும் போலியான சென்னை மெட்ரோ ரயில் நிறுவன வேலை வாய்ப்பு செய்திகளை யாரும் நம்ப வேண்டாம். இந்நிறுவனத்தில் பல்வேறு வேலை வாய்ப்புகள் இருப்பதாக பொய்யாக இணைய தளத்தில் செய்திகளை வெளியிடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற தவறான செய்திகளை பரப்பி குற்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே இணையதளத்தில் வெளியாகும் பொய்யான செய்திகளை / விளம்பரங்களை நம்பி, அதிகார பூர்வமற்ற தனியாரிடம் வேலை தேடி இழப்புகள் ஏற்பட்டால் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. என தெரிவிக்கப்பட்டுள்ளது .