கடந்த 2023-ம் ஆண்டு முதல் தொடரப்பட்ட போதைப்பொருள் வழக்கில் இருந்து தெலுங்கு நடிகர் நவ்தீப் பல்லபோலுவை விடுவித்து தெலுங்கானா உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு ஐதராபாத்தில் உள்ள குடிமல்காபூர் காவல் நிலையத்தில், நடிகர் நவ்தீப் போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும், அதன் விற்பனையில் தொடர்பிருப்பதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அவர் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீண்ட நாட்களாக தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜே. ஸ்ரீனிவாஸ் ராவ் நேற்று தனது தீர்ப்பை வழங்கினார். அதில் அவர் குறிப்பிட்டதாவது: நடிகர் நவ்தீப்பிடம் இருந்து எந்தவிதமான போதைப்பொருளும் நேரடியாகக் கைப்பற்றப்படவில்லை. சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களுக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை. முதல் தகவல் அறிக்கையிலோ (FIR) அல்லது சாட்சிகளின் ஆரம்பக்கட்ட வாக்குமூலத்திலோ அவரது பெயர் இடம்பெறவில்லை; வெறும் சந்தேகத்தின் அடிப்படையிலேயே அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
உறுதியான ஆதாரங்கள் இல்லாமல் ஒரு வழக்கை நடத்துவது சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகும் என்று குறிப்பிட்ட நீதிபதி, நடிகர் நவ்தீப் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

