Skip to content

திருச்சியில் போதை மாத்திரை வேட்டை: பெண் உட்பட 2 பேர் கைது

திருச்சி பாலக்கரை பகுதியில் சட்டவிரோதமாகப் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், நேற்று போலீசார் பாலக்கரை பெல்ஸ் கிரௌண்ட் (Bells Ground) பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் பாலக்கரை காஜாபேட்டை பசுமடம் பகுதியைச் சேர்ந்த பரகத் நிஷா (41) என்பது தெரியவந்தது. அவரிடம் நடத்திய சோதனையில், விற்பனைக்காக வைத்திருந்த 16 போதை மாத்திரை ஊசிகளை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல், திருச்சி உய்யகொண்டான் திருமலை எம்.எம். நகர் பகுதியில் உள்ள மதுபான கடை அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக அரசு மருத்துவமனை போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த போலீசார் சோதனையிட்டபோது, சோமரசம்பேட்டை நாச்சிகுறிச்சி ஜோதி நகரைச் சேர்ந்த சுரேஷ்குமார் (46) என்பவர் போதை மாத்திரைகளை விற்றுக்கொண்டிருந்தது தெரியவந்தது.

அவரிடமிருந்து 4,500 போதை மாத்திரைகள், ஊசிகள், விற்பனைப் பணம் 7,500 ரூபாய் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். சுரேஷ்குமாரைக் கைது செய்த போலீசார், இந்த போதை மாத்திரை நெட்வொர்க்கின் பின்னணியில் இருப்பவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!