திருச்சி எம்.பி. துரை வைகோ இன்று டில்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை சந்தித்தார். இது தொடர்பாக துரை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ரஷ்யாவில் சிக்கியுள்ள இந்திய மருத்துவ மாணவன் கிஷோர் சரவணன் மீட்கப்படுவதற்கு நேற்று நான் அளித்த விளக்கங்களை அமைச்சர் ஜெய்சங்கரிடம் கோடிட்டு காட்டியபோது அமைச்சர் சில விளக்கங்களை அளித்தார்.
இந்த பிரச்னை குறித்து ஜெய்சங்கர், ரஷ்ய உயர் அதிகாரிகளிடம் பேசியபோது, கிஷோர் சரவணன் தனது வழக்கில் தண்டனையை ரத்துசெய்ய ரஷ்ய குடியுரிமை பெற்றுக்கொண்டு போருக்கு செல்ல சம்மதித்து அதன் ஆவணங்கள் அனைத்திலும் கையொப்பமிட்டுள்ளார் என்றும், அதனால் அவர் இப்போது ரஷ்ய பிரஜை என்றும் அதுகுறித்து இந்தியா கேட்கவேண்டாம் என்றும் ரஷ்யா பதிலளித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்டு நான் பேசும்போது, இல்லை அவர் வற்புறுத்தப்பட்டே கையெழுத்து பெற்றுள்ளதாக சொல்கிறார் என்றேன்.
இன்னும் சில தினங்களில் அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்யப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், அப்போது அந்நாட்டு உயர் பொறுப்பில் உள்ள வெளியுறவு அதிகாரிகளை நேரில் சந்திக்கையில், சிறப்பு ஏற்பாட்டில் கிஷோர் சரவணனை இந்தியாவிடம் ஒப்படைக்க கேட்க உள்ளதாகவும் தெரிவித்தார்.என்னை நம்பிக்கையோடு இருக்கும் படியும் கேட்டுக்கொண்டார்.
அதன்பிறகு, இலங்கை அரசால் கைதுசெய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சானைக்காக நான் வெளியுறவுத்துறைக்கு கொடுத்த கோரிக்கை கடிதத்திற்கு, அந்ததுறையின் செயலாளர் விக்ரம் மிஸ்ரி அவர்கள் அனுப்பிய பதில் கடிதத்திற்கு நன்றி தெரிவிப்பதுடன், மீண்டும் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை மீட்டுக்கொடுக்க வேண்டினேன்.
கடந்த 31.07.2025 அன்று, டெல்லியில் வெளியுறவுத்துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியை நேரில் சந்தித்து, தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து இலங்கைக் கடற்படையால் தாக்கப்பட்டு கைது செய்யப்படும் துயர நிலை நீடித்து வருவதையும், கடந்த 29.07.2025 அன்று கச்சத்தீவு அருகே 14 இந்திய மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டியதாகக் குற்றம்சாட்டி இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டதையும் சுட்டிக்காட்டி,
இப்பிரச்சினைக்கு உடனடியாகவும் நிரந்தரமாகவும் தீர்வு காண, ஒன்றிய அரசு உரிய பொறுப்பேற்று இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகள் உள்ளிட்ட உடைமைகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினேன்.
இதற்கு பதிலளித்த வெளியுறவுத்துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி , ஒன்றிய அரசு இந்திய மீனவர்களின் விரைவான விடுதலை மற்றும் அவர்களது மீன்பிடி படகுகளுடன் திருப்பி அனுப்புதல் உள்ளிட்ட பிரச்சினைகளை, இருதரப்பு பேச்சுவார்த்தைகள், தூதரக வழிகள் மற்றும் பல்வேறு உத்தியோகபூர்வ தொடர்புகள் மூலம் இலங்கை அரசுடன் தொடர்ந்து எடுத்துரைத்து வருவதாகத் தெரிவித்தார். குறிப்பாக, பிரதமர் மோடி, இலங்கை ஜனாதிபதியுடனான சமீபத்திய சந்திப்பில் இவை குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், இப்பிரச்சினையை மனிதாபிமான மற்றும் வாழ்வாதார அடிப்படையில் மட்டுமே பரிசீலிக்க வேண்டுமென இலங்கை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் அவரது பதில் கடிதத்தில் குறிப்பிட்டார்.
முக்கியமாக, மன்னார் அருகே இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 இந்திய மீனவர்கள் மற்றும் ஒரு படகு தொடர்பான விசாரணை இன்று (07.08.2025) நடைபெற உள்ளதாகவும்,
புட்டலம் அருகே 29.07.2025 அன்று கைது செய்யப்பட்ட 5 மீனவர்கள் மற்றும் ஒரு கப்பல் தொடர்பான விசாரணை 05.08.2025 அன்று நடைபெற்றதாகவும் தெரிவித்தார்.
மேலும், இந்திய தூதரக அதிகாரிகள் இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களுடன் தொடர்பில் உள்ளனர் என்றும், அவர்களுக்கு தூதரக மற்றும் சட்ட உதவிகள் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் வழங்கி வருவதாகவும் அவர் கூறினார்.
ஆயினும், மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கையில் விசாரணை நடந்து கொண்டிருக்கும் (05.08.2025) அதே நாளில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஒன்பது இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடி படகுடன் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டது குறித்து அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தேன்.
அந்த மனுவில், இந்தக் கைது சம்பவம் சர்வதேச கடல் எல்லைக் கோட்டிற்கு அருகில், இந்திய கடற்கரையிலிருந்து சுமார் 2 கடல் மைல் தொலைவில் நடைபெற்றதைச் சுட்டிக்காட்டி, இது ராமேஸ்வரத்தின் மீனவ சமூகத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதை விளக்கினேன். இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்படும் இத்தகைய எல்லை தாண்டிய நடவடிக்கை மீனவர்களை அடிக்கடி கைது செய்ய வழிவகுப்பதுடன், பொருளாதார இழப்பை ஏற்படுத்துவதால், அவர்களது குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன என்றும் குறிப்பிட்டேன்.
கைது செய்யப்பட்ட ஒன்பது மீனவர்களின் பெயர்கள் மற்றும் படகின் அடையாளத்தை எனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, அவர்கள் அனைவரையும் விடுதலை செய்வதுடன், பறிமுதல் செய்யப்பட்ட படகை சேதமின்றி திருப்பி அனுப்ப ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டேன். இதற்காக வெளியுறவுத்துறை அமைச்சகம் உடனடியாக தூதரக வழிகளில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினேன்.
இப்போது கைது செய்யப்பட்டவர்களையும் உள்ளடக்கி, அனைத்து மீனவர்களையும் அவர்களது உடைமைகளுடன் விரைந்து இந்தியாவிற்கு திருப்பியனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் நம்பிக்கை அளித்தார்.