தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.அந்த வகையில், சுற்றுப் பயணத்தின்போது பொதுமக்கள் மத்தியில் பேசுவது மட்டுமல்லாமல், தொழிலாளர்கள், விவசாயிகளையும் சந்தித்து வருகிறார். தற்போது, கோவை மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில், இன்று காலை பொள்ளாச்சி சென்றார். அங்கு விவசாயிகள் உடனான சந்திப்பு நிகழ்ச்சிக்கு பொள்ளாச்சி தொகுதி அதிமுக எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் ஏற்பாடு செய்தார். இந்நிகழ்ச்சிக்கான மேடையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமர்ந்தார். அவருக்கு இருபுறமும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் அமர்ந்திருந்தனர். அந்த நேரத்தில், விவசாயிகள் பலர் எழுந்து எடப்பாடி பழனிசாமியிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அப்போது விவசாயி ஒருவர், ” அதிமுக ஆட்சி காலத்தில் ஏன் கள் இறக்க அனுமதி அளிக்கவில்லை?” என்று கேள்வி எழுப்பினார்.
இப்படி திடீரென விவசாயிகள் எழுந்து கேள்வி கேட்டதால் சுதாரித்துக்கொண்ட எஸ்.பி.வேலுமணியும், பொள்ளாச்சி ஜெயராமனும் பிறகு பேசிக் கொள்ளலாம் என்று சமாதானம் செய்தனர். எடப்பாடி பழனிசாமியும் செய்கை மூலம் பிறகு பேசிக்கொள்ளலாம் என்றார். இதனால், அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இந்நிகழ்வில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட பல திட்டங்கள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட திட்டங்களை அதிமுக ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் செயல்படுத்துவோம்” என்று தெரிவித்தார்.