அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சிவகங்கை மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்காக சென்னையில் இருந்து திருச்சி வந்த எடப்பாடி விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சிவகங்கை மாவட்டத்தில் எழுச்சி பயணத்தை தொடர உள்ளேன். இதுவரை 49 சட்டமன்ற தொகுதி பயணம் சென்றுள்ளேன்.தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் எழுச்சி பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் கடன் பெற முடியாமல்
சிரமம் இருந்தது. இது குறித்து விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். கடன் பெற பழைய முறையை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இது குறித்து பிரதமரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். அதனை சரி செய்வதாக கூறியுள்ளார். அதன் பின்னர் அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது. பழையபடி வங்கியில் கடன் பெறலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எந்த கட்சியோடு எந்த கட்சி கூட்டணி சேருகிறது என்பதை சம்பந்தப்பட்டவர்களிடம் தான் கேட்க வேண்டும். யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது.
வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து மத்திய அரசு கூறியது பத்திரிகையாளர்களான உங்களுக்கே தெரியும். பரபரப்புக்காக கேள்வி கேட்க வேண்டாம். அது முடிந்து போன விஷயம். இந்த உலகத்தில் இந்தியா முழுவதும் மத்திய அரசு ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.
1976 ஆண்டில் இருந்து கல்வி மத்திய பொது பட்டியலில் இருக்கிறது. இதுவரை ஏன் மாநில பட்டியலுக்கு மாற்றவில்லை. அப்போதைய திமுக பாஜக கூட்டணியில் இருக்கும் போது என்ன செய்தார்கள் அதன் பின்னர் காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருக்கும்போது என்ன செய்தார்கள்.
தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருக்கிறது. அதிமுக தலைமையில் பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் இருக்கின்றன. தேர்தல் நெருங்கும்போது போது தான் யார் யார் கூட்டணியில் இருப்பார்கள் என தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.