2 நாள் பயணமாக தமிழகம் வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி, தூத்துக்குடியில் நடைபெறும் நிகழ்வுகளை முடித்துக் கொண்டு விமானம் மூலம், திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு இன்று (சனிக்கிழமை) இரவு 10.35 மணிக்கு மேல் வருகை தரவுள்ளார். விமான நிலையத்தில் திருச்சி மாவட்ட நிர்வாகம், மாநகரக் காவல்துறை, பாஜக சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. தமிழக அரசின் சார்பில், அமைச்சர்களும் பிரதமரை வரவேற்கவுள்ளனர். வரவேற்பு முடிந்த பிறகு, சாலை மார்க்கமாக பாதுகாப்புப் படையினர் வாகனத்தில் திருச்சி ஆட்சியரக சாலையில் உள்ள ராஜா காலனி பகுதியில் அமைந்துள் கோர்ட்யார்ட் மரியாட் எனும் தனியார் நட்சத்திர தங்கும் விடுதிக்கு வந்து இரவு ஓய்வெடுக்கிறார்.
பின்னர், காலை மீண்டும் சாலை மார்க்கமாக, திருச்சி விமான நிலையம் செல்லும் பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரம் செல்கிறார். அங்கு நிகழ்வுகளை முடித்துக் கொண்டு, பிற்பகல் திருச்சி பன்னாட்டு விமானநிலையம் திரும்புகிறார். இங்கிருந்து பிற்பகல் 2.30 மணியளவில் விமானத்தில் புதுதில்லி புறப்பட்டு செல்லவுள்ளார்.
இதற்கிடையில் இன்று இரவு திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் பிரதமர் மோடியை அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசுகிறார் இந்த சந்திப்பு இன்று இரவு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது அல்லது நாளை காலையில் சந்திக்க வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.இதற்கிடையில் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்று திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் உள்ள அவர் தங்கும் ஓட்டலில் அதிமுக சார்பில் வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.