அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2024 மக்களை தேர்தலில் பிரமாண்ட கூட்டணி அமைப்பேன் என்று சொன்னார். ஆனால் ஓட்டு வங்கி உள்ள எந்த ஒரு கட்சியும் அதிமுக கூட்டணியில் சேரவில்லை. இதனால் மக்களவை தேர்தலில் அதிமுக மோசமான தோல்வியை சந்தித்தது.
இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பிரசார பயணத்தை தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாதபடி, எடப்பாடி பழனிசாமி இப்போதே பிரசாரத்தை தொடங்கி விட்டார். தற்போது பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்து உள்ளது. வேறு எந்த ஒரு கட்சியும் அதிமுகவுடன் சேரவில்லை.
ஓபிஎஸ், தினகரன், ஜி.கே. வாசன், அன்புமணி போன்றவர்கள் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் இவர்கள் எல்லோரும் கூட்டணி ஆட்சி தான் வரும். எங்களுக்கும் ஆட்சி ,அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை பிரதானமாக வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
மக்களுக்கு சேவை செய்ய எங்களுக்கு வாய்ப்பு வேண்டும் என்று தான் கேட்கிறோம், பதவி ஆசை எங்களுக்கு கொஞ்சம் கூட கிடையாது என்றும் சொல்லிக்கொள்ளும் இவர்கள் அனைவருக்கும் எடப்பாடி நேற்று திட்டவட்டமான பதில் அளித்து விட்டார். அதிமுக தனித்து தான் ஆட்சி அமைக்கும் என்று ஒரே போடு போட்டு விட்டார். ஆனாலும் இவர்கள் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி வந்து விடக்கூடாது என்று நாள்தோறும் வேண்டிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் தான் நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் தமிழக மக்கள் யாரும் கூட்டணி ஆட்சியை விரும்புவதாக தெரியவில்லை.
எடப்பாடி போகிற இடங்களில் எல்லாம் இன்னும் பிரமாண்ட கூட்டணி அமைப்பேன். 200க்கு மேல் 210 இடங்களை எங்கள் கூட்டணி பெற்று தனித்து ஆட்சி அமைப்பேன் என்று உறுதியாக கூறுகிறார்.திமுக கூட்டணியில் உள்ள பல கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து பார்த்து சோர்ந்து விட்டார் எடப்பாடி.
நேற்று திமுக கூட்டணியில் உங்களுக்கு மரியாதை இல்லை. அதிமுக கூட்டணிக்கு வந்தால் ரத்தின கம்பளம் விரித்து வரவேற்பேன் என்றும் கூறி பார்த்தார். இதற்காக அவர் பல ரத்தின கம்பளங்கள் வாங்கி வைத்திருக்கிறார் போல என மாற்று கட்சியினர் கிண்டல் செய்து வருகிறார்கள்.
நேற்று பேசும்போது மேலும் ஒரு தகவலை எடப்பாடி கூறினார். நீங்கள் நினைத்து பார்க்க முடியாத, பிரமாண்டமான ஒரு கட்சி எங்கள் கூட்டணியில் சேர இருக்கிறது என்று ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
தமிழ்நாட்டில் திமு,க அதிமுகவை விட பிரமாண்டமான கட்சி இருக்கிறதா, அது என்ன கட்சி என்று இப்போது எல்லோரையும் குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறார் எடப்பாடி.
இது குறித்து அரசியல் நோக்கர்கள் பலர் கருத்து கூறும்போது, நடிகர் விஜய்யுடன் எடப்பாடி தொடர்பில் இருக்கிறார். இவர்களுக்கிடையேயான பேச்சுக்கள் பல சுற்றுகள் நடந்து உள்ளது. எனவே தான் ஊழல் கட்சி என திமுகவை சாடும் விஜய், ஊழலுக்காகவே இந்தியாவில் சிறைக்கு சென்ற ஒரே முதலமைச்சர் ஜெயலலிதா என்பதையோ, அதிமுக ஊழல் கட்சி என்றோ ஒரு நாள் கூட பேசியதில்லை.
காரமணம் அதிமுகவுடன் அவருக்கு ரகசிய தொடர்பு உள்ளது. அதை மனதில் வைத்து தான் எடப்பாடி இப்படி பேசுகிறார். ஜனவரி வாக்கில் இந்த கள்ளக் கூட்டணி வெளிச்சத்துக்கு வந்துவிடும் என்கிறார்கள். அதுவரை இப்படி புதிர் போட்டு பேசுவோம் என எடப்பாடி பேசுகிறார் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.
எனவே எடப்பாடி கூறும் பிரமாண்டமான கட்சி விஜயின் தவெக வாகத்தான் இருக்கும் . இந்த கட்சிக்கு தான் எடப்பாடி ரத்தினக்கம்பளம் விரிக்க வேண்டியது இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.