Skip to content
Home » விஜய் கட்சியுடன் அதிமுக கூட்டணியா?….. கோவையில் எடப்பாடி பேட்டி

விஜய் கட்சியுடன் அதிமுக கூட்டணியா?….. கோவையில் எடப்பாடி பேட்டி

  • by Senthil

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

“முதல்வர் ஸ்டாலின் என்னைப் பற்றி பல விமர்சனங்களை கடந்த சில நாட்களாக முன்வைத்து வருகிறார். அதனை ஊடகங்கள் வாயிலாக நான் தெரிந்து கொண்டுள்ளேன். முதல்வர் தனது கட்சி நிர்வாகிகளுக்கு எழுதிய மடலில் நான் அவரைப் பற்றி கொச்சைப்படுத்தி பேசியதாக தெரிவித்துள்ளார்.

நான் முதல்வராக இருந்த போது, ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது என்னை பற்றி தனிப்பட்ட வகையில் பல விமர்சனங்களை செய்துள்ளார். ஊர்ந்து, பறந்து என குறிப்பிட்டுள்ளார். தற்போது நடைபெற்ற கூட்டத்திலும் கரப்பான்பூச்சி என கூறியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் தனது பதவியையும் நிலையையும் மறந்து இது போன்ற விமர்சனங்களை செய்து வருகிறார்.

அதிமுக ஆட்சிக்காலத்தில் எந்த திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை என ஸ்டாலின் விமர்சிக்கிறார். ஆனால் அதிமுக ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கும் அமல்படுத்த திட்டங்களுக்கும்தான் தற்போது திமுக ஆட்சி காலத்தில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகிறது.

எடுத்துக்காட்டாக கோவை மாவட்டத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் பல்வேறு  வளர்ச்சி திட்ட பணிகள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. குறிப்பாக பில்லூர் மூன்று கூட்டு குடிநீர் திட்டம், அத்திக்கடவு அவினாசி திட்டம், உக்கடம் மேம்பாலம், ஐ டி பூங்கா ஆகியவற்றுக்கு அதிமுக ஆட்சி காலத்தில் தான் அடிக்கல் நாட்டப்பட்டது.

மேலும், அத்திக்கடவு அவினாசி இரண்டாம் கட்ட திட்டம், விமான நிலைய விரிவாக்க திட்டம், மேற்கு புறவழி சாலை திட்டம் என அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தற்போது ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. சில திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

கோவை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக அதிமுக ஆட்சியிலேயே 99 சதவீத பணிகள் முடிவு பெற்றது. நில எடுப்பு நடவடிக்கையில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அந்தப்பணிகளை சுணக்கமாக திமுக அரசு மேற்கொண்டு வருகிறது.

திமுக அரசு கோவை மாவட்டத்திற்காக எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. அறிவிப்பு மட்டுமே செய்துள்ளது. எந்தத் திட்டத்தையும் அறிவிக்காமல், பணியும் நடக்காமல் மாவட்டங்கள் தோறும் சென்று முதல்வர் ஆய்வு செய்து வருகிறார்.

அரசு ஊழியர் சங்கத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக 2021 தேர்தல் வாக்குறுதியில் கூறிவிட்டு, தற்போது திமுக அரசு அதை அமல்படுத்தாமல் உள்ளது. அதனால் அரசு ஊழியர் சங்கத்தினர் போராட்டம் நடத்தி முதல்வர் ஸ்டாலினை மீண்டும் எதிர்க்கட்சி பதவியில் அமர வைப்போம் என கூறி உள்ளனர். இதைத்தான் நானும் செய்தியாளர்களிடம் தெரிவித்தேன்.

கோவையில் தங்க நகை பூங்கா அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். அதிமுக ஆட்சிக்காலத்தில் புலுவாம்பட்டியில் தங்க நகை பூங்கா அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டு நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. தொண்டாமுத்தூர் தொகுதியில் இருந்த அந்த திட்டத்தை தற்போது கிணத்துக்கடவு தொகுதிக்கு மாற்றியுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் வீட்டு வசதி வாரியத்தின் 3300 ஏக்கர் கையகப்படுத்திய நிலங்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். வீட்டு வசதி வாரியத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்கள் நீதிமன்றம் சென்று அந்த நீதிமன்ற ஆணையின் அடிப்படையிலேயே தற்போது 410 ஏக்கருக்கான ஆணைகள் மட்டுமே முதல்வரால் வழங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் நிலங்களை ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

அதிமுக ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து உதயநிதியுடன் விவாதிப்பதற்கு எங்கள் கட்சியிலும் முன்னாள் அமைச்சர்கள் பலர் இருக்கின்றனர். முதல்வரிடம் கேள்வி கேட்டால் உதயநிதி ஏன் பதில் சொல்ல வேண்டும். அப்படி என்றால் திறமை இல்லாத, பொம்மை முதல்வராக இருக்கிறார் என விமர்சிப்பதில் தவறில்லையே. பிற மாநிலங்களில் ஒரே ஒரு முதல்வர் இருக்கும் போது தமிழகத்தில் மட்டுமே நான்கு முதல்வர்கள் உள்ளனர். அதிகாரமிக்கவர்களாக உள்ள அவர்கள் யார் என்று ஊடகங்களுக்கே தெரியும்.

திமுக ஆட்சிக்காலத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு உள்ளது. காவல்துறையினர் முழு சுதந்திரத்தோடு செயல்பட முடிவதில்லை. இதனால் போதை பொருள் பயன்பாடு, விற்பனை, தயாரிப்பு என அனைத்தும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது என்றார்.

2026 சட்டமன்ற தேர்தலில்  விஜய் கட்சியுன் கூட்டணி ஏற்படுமா என கேட்டதற்கு, தேர்தல் கூட்டணி குறித்து பேசுவதற்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் காலம் உள்ளது.  தேர்தல் நேரத்தில் தான் அது குறித்து சொல்ல முடியும். திமுக ஆட்சியை அகற்ற வேண்டும், பாஜகவோடு கூட்டணி இல்லை என்பதே எங்களது நிலைப்பாடு. அதிமுக பற்றி மட்டுமே சில ஊடகங்கள் பொய்யான செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். ஊடகங்கள் நடுநிலையோடு உண்மையான செய்திகளை பாரபட்சமின்றி வெளியிட வேண்டும்”

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!