தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று மாலை முதல் உருண்டையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதன்படி அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ் பா. சாஸ்திரி ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கொண்ட ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மேலும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்த 9 நிலையான கண்காணிப்புக்குழு மற்றும் 9 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் இயங்கும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில், கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 599 4401,
தொடர்புக்கு: 1950, மற்றும் தொலைபேசி எண்கள்: 04329 228843, 04329 228847 ஆகிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்ட மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தொலைபேசி எண்களை சோதனை செய்து பார்த்தார். மேலும் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு மற்றும் தேர்தல் பறக்கும் படை குழுவினரின் வாகனங்கள், நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள், உடன் பணியாற்றும் காவலர்கள் மற்றும் வீடியோ ஒளிப்பதிவாளர்கள் ஆகியவற்றையும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் இரத்தினசாமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ் பா.சாஸ்திரி ஆகியோர் பார்வையிட்டனர்.
இக்குழுவினர் தேர்தல் விதிமுறை மீறல்கள் உள்ளதா, வாகனங்களில் அதிக அளவில் பணம் எடுத்துச் செல்கின்றார்களா, வாக்காளர்களுக்கு பரிசு பொருள் மற்றும் பணம் ஆகியவை வழங்கப்படுகிறதா? என்பதை கண்டறியும் பணியில் ஈடுபடுவார்கள். ஒரு குழுவுக்கு 3 பேர் வீதம், மூன்று வேளையும் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் இந்த குழுக்கள் சோதனையில் ஈடுபடுவார்கள் என்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ரத்தினசாமி தெரிவித்தார். மேலும் கட்டுப்பாட்டு அறிவிக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களில் பொதுமக்கள், தேர்தல் குறித்த புகார்களை தெரிவிக்கலாம் என்றும், தொலைபேசியில் அழைப்பவர்களின் பெயர் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

