திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் கடந்த 2018ல் மசினி என்ற யானை பராமரிக்கப்பட்டு வந்தது. 2018 மே மாதம் 25ம் தேதி கோவிலில் காலை பூஜை நடந்த போது அம்மன் சன்னதி அருகே யானை நிறுத்தப்பட்டிருந்தது. பூஜை முடிந்த பின் கோவிலில் பலகார ஸ்டால் அருகே யானை நின்றது. அதன் அருகே பாகன் கஜேந்திரன் நின்று கொண்டிருந்தார். உதவி பாகனான அவரது மகன் அச்சுதன் (22) சற்று தள்ளி நின்றார். அன்றைய தினம் கோயிலில் 5 திருமணங்களும் நடந்தது. இதனால் கோயிலில் கூட்டம் அதிக அளவில் நிரம்பி வழிந்தது.
திடீரென யானை மசினியின் நடவடிக்கை மாறியது. இதனால் பாகன் யானையை அங்குசத்தால் தட்டி கொண்டிருந்தார். காலை 10.35 மணி அளவில் யானை திடீரென கோபம் கொண்டு பிளிறியது. மேலும் அருகில் இருந்த பாகன் கஜேந்திரனை தும்பிக்கையால் தூக்கி கீழே போட்டு காலால் பயங்கரமாக மிதித்து கொன்றது. இதனை கண்ட பக்தர்கள் அலறி அடித்து கோவிலை விட்டு உடனே வெளியே ஓடினர்.
மகன் அச்சுதன் கோவிலில் நின்றிருந்தார். தனது கண்முன்னே தந்தையை யானை மிதித்து கொன்றதை கண்டு அவர் கதறி அழுதார். பின்னர் அந்த யானைக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. ஆனாலும் அதன் போக்கில் மாற்றம் ஏற்படாததால் அதனை மதுமலை காட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் இன்று காலை முதுமலையில் மசினி யானையின் பாகன் சி.எம். பாலன் யானைக்கு காலை உணவு வழங்கினார். அப்போது திடீரென மதம் பிடித்த மசினி, பாலனை துதிக்கையால் தூக்கி வீசி காலில் போட்டு மிதித்தது. இதில் அவர் உயிருக்கு போராடினார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே பாலன் உயிரிழந்தார்.

