சென்னை புறநகர் பகுதியான பெருங்குடி, கல்லுக்குட்டை, திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் அன்பு கணபதி ( 29). இவருக்கும் எதிர்வீட்டில் வசித்து வரும் நண்பரான ராஜதுரை என்பவரது மனைவிக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. ராஜதுரை வீட்டில் இல்லாத நேரத்தில் கணபதி அவ்வபோது வீட்டிற்கு வந்து செல்வாராம். இதனை அறிந்த ராஜதுரை இருவரையும் கண்டித்து கள்ளக்காதலை கைவிடுமாறு கூறினார். ஆனால் கள்ளக்காதலர்கள் தொடர்ந்து தனிமையில் சந்தித்து அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தனர்.இதையடுத்து ராஜதுரை வீட்டை காலி செய்துவிட்டு வேறுவீட்டுக்கு செல்ல முடிவு செய்தார். இதற்காக நேற்று காலை புதிய வீடு பார்ப்பதற்காக ராஜதுரை, மனைவியுடன் வெளியில் சென்று விட்டு வீட்டுக்கு வந்து தூங்கினார். சிறிது நேரம் கழித்து பார்த்த போது தனது மனைவி, குழந்தையுடன் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜதுரை மனைவியின் கள்ளக்காதலன் அன்பு கணபதியை தீர்த்து கட்ட முடிவு செய்தார். அதன்படி நேற்று இரவு அவர் மதுகுடிக்க அன்பு கணபதியை அழைத்தார். இருவரும் பரணி தெருவில் உள்ள ஏரிக்கரையில் அமர்ந்து மதுகுடித்த போது கள்ளக்காதல் தொடர்பாக அவர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த ராஜதுரை மறைத்து வைத்து இருந்த கத்தியால் அன்பு கணபதியை சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடி விட்டார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அன்பு கணபதியை மீட்டு வேளச்சேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். கொலையுண்ட அன்பு கணபதிக்கு மனைவியும், 2 பெண்குழந்தைகளும் உள்ளனர். துரைப்பாக்கம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து ராஜ துரையைதேடி வருகிறார்கள்.