தஞ்சாவூர், கரந்தை அருகே வலம்புரி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (50). இவரது மகன் ராஜ்கமல் (33). தஞ்சாவூர் வடக்கு வீதியை சேர்ந்தவர் பூபேஸ் குமார் (52). இவரது மகள் மோனிஷா (30), மகன் அஜித் (27). கோவிந்தராஜ் மகன் ராஜ்கமலுக்கும், பூபேஷ்குமார் மகள் மோனிஷாவுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
கோவிந்தராஜ் மற்றும் பூபேஸ்குமார் குடும்பத்திற்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கோவிந்தராஜ், பூபேஸ்குமார் இருவரும் குடும்பத்தகராறில் ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் தஞ்சாவூர் மேற்கு போலீசார், விசாரணை நடத்தி, கோவிந்தராஜ், பூபேஸ்குமார் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். போலீஸ் ஸ்டேஷனை விட்டு வெளியில் வந்து சற்றுத் தொலைவில் மீண்டும் பூபேஸ்குமார் மற்றும் கோவிந்தராஜ் மத்தியில் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
இதில், காயமடைந்த கோவிந்தராஜ், மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், சிகிச்சைக்காக வெளிபுற நோயாளிகள் பிரிவில் காத்திருந்தார். இதற்கிடையில், பூபேஸ்குமார் மகன் அஜித் நடந்த விஷயத்தை தனது அக்கா மோனிஷா மூலம் தெரிந்துக்கொண்டார். பின்னர் கோவிந்தராஜை பார்க்க அஜித் சென்ற போது, அவர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் இருப்பதாக அறிந்துக்கொண்டார். உடன் அங்கு சென்ற அஜித், வெளிபுற நோயாளிகள் பிரிவில் அமர்ந்து இருந்த கோவிந்தராஜ் பாட்டிலை உடைத்து கழுத்தில் குத்தினார்.
இச்சம்பவத்தால், அங்கிருந்த நோயாளிகள், மருத்துவமனை ஊழியர்கள் அலறிய அடித்து சிதறி ஓடினர். எப்போதும் பரபரப்பாக இருக்கும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்திலேயே இந்த சம்பவம் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தகவலறிந்த மருத்துவக்கல்லுாரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அஜித்தை கைது செய்தனர். காயமடைந்த கோவிந்தராஜ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் பூபேஸ்குமாரும் மருத்துவக்கல்லுாரியில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.