தஞ்சாவூர்: தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது. இதில் விவசாயிகள் பேசியதாவது:
தோழகிரிபட்டி கோவிந்தராஜ் :- தஞ்சை மாவட்டத்தில் உள்ள நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் உலர்க்களம் கட்டித் தர வேண்டும். தனிநபர் ஆழ்குழாய் கிணறு அமைக்க ரூபாய் 10 லட்சம் செலவாகிறது இதில் 5 லட்சம் மானியமாக கொடுத்தால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். தற்போது கனமழையால் பாதித்த பயிர்களுக்கு ஏக்கருக்கு 30,000 வழங்க வேண்டும். பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவித்து விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். மழையால் பாதித்த பகுதிகளில் உள்ள வயல்களை பழைய முறைப்படி வேளாண் உதவி அலுவலர்கள் பார்வையிட்டு கிராம நிர்வாக அலுவலரின் ஒப்புதலுடன் நிவாரணம் கிடைக்கப்பெற்றது. ஆனால் தற்போது செயலி முறையில் கணக்கெடுப்பு பணி நடப்பது ஏற்புடையதல்ல. இதனால் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்காது.
ஜீவக்குமார்: சாகுபடி பாதிப்பிற்கு ஹெக்டேருக்கு ரூ 20,000 சொற்பமானதாகும். ஏக்கருக்கு ரூ 8000 இழப்பீடு போதுமானது அல்ல. ஏக்கருக்கு ரூ 35,000 இழப்பீடு தேவை. கால்நடைகள் இழப்பிற்கும் வெற்றிலை வாழை உள்ளிட்டவற்றுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். இழப்பீடு பட்டியலில் வெளிப்படைத்தன்மை தேவை. உடனடியாக கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். புகையான் பூச்சி தாக்குதல் பாதிப்பிற்கு நிவாரணம் வழங்க வேண்டும். விண்ணமங்கலம், சித்திரக்குடி உள்ளிட்ட இடங்களில் இன்னும் பயிர்கள் மழை நீரில் மூழ்கி உள்ளன. போலி உரங்கள் மோசடி மீது நடவடிக்கை எடுத்த அலுவலர் செல்வராஜ் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்.
பழனியப்பன் : தமிழக அரசு மேகதாது விவகாரத்தில் மெத்தனப் போக்கை கையாளாமல் துரித நடவடிக்கை எடுத்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும். தற்போது பெய்த கனமழையினால் பாதிப்படைந்த நெற்பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். உரக்கடைகளில் நடக்கிற மோசடிகளுக்கு அரசு தீவிர நடவடிக்கை எடுத்து கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.
ஏ.கே.ஆர்.ரவிச்சந்தர் :- வடகிழக்கு பருவமழை மற்றும் டிட்வா புயல் மழையால் பாதிப்படைந்த சம்பா, தாளடி நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ,35 ஆயிரம் வழங்க வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் போலி உரங்கள் புழக்கத்தில் இருப்பது தொடர்பாக வேளாண் இணை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதே வேளையில் ஆய்வு செய்த அதிகாரிகளின் மீது உங்கள் நடவடிக்கை என்பது ஏற்புடையதல்ல. போலி உரங்கள் விற்பது, ரசீது இல்லாமல் கூடுதல் விலையில் உரங்கள் விற்பது, அதிக விலைக்கு உரங்கள் விற்பது, போன்ற முறைகேட்டில் ஈடுபடுபவர்களின் உரிமத்தை உடனே ரத்து செய்ய வேண்டும். விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் பயன்பெறும் வண்ணம் ஆடு, மாடு வாங்கவும், ஆட்டுப்பண்ணை மாட்டுப்பண்ணை அமைக்கவும் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்க வேண்டும்.
வாளமர்கோட்டை இளங்கோவன்: மார்கழி பட்டம் தொடங்க இருப்பதால் சிறுதானிய உற்பத்தி பெருகவும், கடலை, கேழ்வரகு,கம்பு போன்ற நேர்த்தியான விதைகளை தர ஆய்வு செய்து விவசாய தொடக்க வேளாண்மை டெம்போக்கள் மூலம் மானிய விலையிலோ அல்லது நிர்ணயிக்கப்பட்ட அரசு விலையிலோ காலத்தோடு வழங்க வேண்டும். டிட்வா புயலால் ஏற்பட்ட சேதத்தை கணக்கிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். வடிகால் வாய்க்காலில் மண்டி உள்ள ஆகாய தாமரைகளை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆம்பலாப்பட்டு தங்கவேல்: ஆம்பலாப்பட்டு தெற்கு ஊராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 6, 2 க்கு உட்பட்ட கல்லணை கால்வாய் மற்றும் விபி 5ம் பிரிவு வாய்க்கால் இடது கரையில் ஆம்பலாபட்டு தெற்கு முதல் ஆலத்தூர் வரையில் செல்லும் 2 கிலோமீட்டர் சாலை மண் சாலையாக உள்ளது. இப்பகுதியில் 35 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சுற்றி 2500 ஏக்கர் சாகுபடி நிலங்கள் உள்ளன, இந்த சாலை வழியாக மாணவ மாணவிகள் மற்றும் விவசாயிகள் செல்ல முடியாத நிலை உள்ளது.இதனை தார்சாலையாக மாற்றி தர வேண்டும். தற்போதைய கனமழை காரணமாக நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு சேதம் அடைந்துள்ளது, இதற்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணத் தொகையாக வழங்க வேண்டும்.
அம்மாப்பேட்டை செந்தில்குமார் : டித்வா புயல் காரணமாக தமிழக அரசு நிவாரணமாக 20 ஆயிரம் ரூபாய் அறிவித்துள்ளது ஏற்புடையது அல்ல. ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். இந்த கனமழையால் வீட்டு சுவர் இடிந்து ஆலமன்குறிச்சி பகுதியில் ரேணுகா என்பவர் இறந்துள்ளார் இவரது குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இதேபோல் கால்நடைகளை இழந்த உரிமையாளர்களுக்கு ஆடுகளுக்கு 10 ஆயிரம் ரூபாயும், மாடுகளுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்க வேண்டும். நீர்நிலைகளை பாதுகாப்பதற்கும், நீர் வழித்தடங்களை மேம்படுத்துவதற்கும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஒரத்தநாடு புண்ணியமூர்த்தி : ஒரத்தநாடு ஒன்றியம் அய்யம்பட்டி முதல் கீராத்தூர் வரை உள்ள சாலை மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. கனமழை காரணமாக இந்த சாலையில் பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது.தற்காலிகமாக இந்த பள்ளங்களை மூட வேண்டும். மேலும் இந்த சாலையை தார் சாலையாக மாற்றி தர வேண்டும்.
அய்யம்பேட்டை முகமது இப்ராஹிம் : டித்வா புயல் காரணமாக சம்பா, தாளடி பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகள், சாலைகள் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளன. அரசு அறிவித்துள்ள 20 ஆயிரம் ரூபாய் போதுமானதல்ல. எனவே 35 ஆயிரம் ரூபாய் வரை வழங்க வேண்டும். கனமழையால் பாதித்த டெல்டா மாவட்டங்களை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும். மேக தாட்டு அணை கட்ட வரையறிக்கை தயார் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ள இதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். தமிழக அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்து இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதம் வரை உயர்த்தி தராததை கண்டிக்கிறோம். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். தமிழக அரசு தஞ்சாவூர் மாவட்டத்தில் அவருக்கு நினைவு மண்டபம் கட்ட வேண்டும். சம்பா, தாளடி பயிர்களில் தற்போது பொறுத்து மற்றும் செம்பட்டையான் பூச்சி தாக்குதல் காணப்படுகிறது. இதுகுறித்து வேளாண் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரமூர் அன்பழகன் : கடந்த ஆண்டு பருவம் தவறிய மழையினால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காத நிலையில் தற்போது, பருவ மழை பாதித்த விவசாயிகளின் நிலங்களை கணக்கெடுப்பு பணிகளை ஆப் (Crop Damage Assesment APP ) வாயிலாக வேளாண்மை துறை உதவி வேளாண்மை அலுவலர்களை அறிவுறுத்திருப்பது ஏற்புடையதல்ல. இதனால் நிவாரணம் விவசாயிகளுக்கு எப்போது கிடைக்கும் என்று தெரியாத நிலையே உள்ளது. மாற்று வழியில் கணக்கெடுப்பை முடித்து விரைவில் நிவாரணம் கிடைத்திட வழிவகை செய்திட வேண்டும். நமது மாவட்டத்தில் அரிசி, கரும்பு, சோளத்தில் இருந்து எத்தனால் தயாரிக்கும் ஆலையை நிறுவ ஆவன செய்ய வேண்டும்.

