ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் சங்களா (42). இவர் தனது மகன் ரோகித் சங்களா (19) என்பவருடன் சேர்ந்து சென்னை, ஏழுகிணறு, வைத்தியநாதன் தெருவில் தங்கியிருந்து இனிப்பு பலகாரம் செய்யும் தொழில் செய்து வந்தார்.
ஜெகதீஷ் சங்களா ஊரில் உள்ள தனது மனைவியை கடுமையாக அடிக்கும் வழக்கம் கொண்டவராம். மேலும் வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் பொறுப்பு இல்லாமல் இருப்பதாக மகன் ரோகித் சங்களாவை அடிக்கடி திட்டி அவமானப்படுத்தி வந்துள்ளார். இதனால் தனது தந்தை மீது ரோகித் கடும் கோபத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் ரோகித் வேறு இடத்தில் வேலை செய்து சம்பளப் பணமாக ரூ.17 ஆயிரத்தை வாங்கி வந்து தனது தந்தையிடம் கொடுத்துவிட்டு, செலவுக்கு பணம் கேட்டுள்ளார். அப்போது ஜெகதீஷ் பணத்தைக் கொடுக்காமல், மகனை வழக்கம்போல் திட்டியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஜெகதீஷ் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ரோகித் இரும்புக் கம்பியால் தந்தையை தலையில் பலமாக தாக்கி கொலை செய்துவிட்டு, கொண்டித்தோப்பில் வசிக்கும் உறவினர் மன்கனி ராமிடம் போன் மூலம் தந்தையை கொலை செய்துவிட்டதாக தகவல் கூறியுள்ளார்.
மேலும் தந்தை ரத்தம் வடிந்த நிலையில் சடலமாகக் கிடந்ததை வீடியோவாக எடுத்து அதையும் உறவினருக்கு அனுப்பியுள்ளார். ஏழுகிணறு போலீஸார் சடலத்தை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர்.ரோகித்தை கைது செய்தனர்.

