‘ரெட் பிக்ஸ்’ யு-டியூப் சேனலில் ஒரு பேட்டியின் போது சவுக்கு சங்கர், பெண் போலீசார் குறித்து அவதுாறு கருத்துகளை தெரிவித்திருந்தார். இது தொடர்பாக கோவை, சேலம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் சவுக்கு சங்கர் மீது அவதுாறு பரப்புதல், பணிபுரிய விடாமல் தடுத்தல், அனுமதியின்றி தவறான கருத்துகளை வெளியிடுதல், தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல் தற்போது சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு, கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சவுக்கு சங்கரின் நேர்காணலை ஒளிபரப்பிய ‘ரெட் பிக்ஸ் யு-டியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்ட் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெலிக்ஸ் ஜெரால்டு ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் கோர்ட் இதனை நிராகரித்தது. அநாகரீகமாக விவாதம் செய்த ரெட் பிக் யூடியூப் சேனலின் தலைமை நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்டை முதல் குற்றவாளியாக சேர்த்திருக்க வேண்டும் என நீதிபதி கருத்து தெரிவித்தார். இந்த நிலையில் பெலிக்ஸ் ஜெரால்டை போலீசார் தேடி வந்தனர். அவர் டில்லி சென்று இருப்பது தெரியவந்தது. மேலும் அவர் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆகியவற்றில் மனு அளிக்க டில்லி சென்று இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் பெலிக்ஸ் ஜெரால்டை திருச்சி மாவட்ட எஸ்.பி. வருண்குமார் தலைமையிலான தனிப்படையினர் டில்லியில் இன்று காலை கைது செய்தனர். பெலிக்ஸ் ஜெரால்டு ரயில் மூலம் திருச்சிக்கு அழைத்து வரப்பட உள்ளார்.
