புதுச்சேரி சட்டசபைக்கு ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 16ம் தேதி துவங்கியது. முதல் 2 நாட்களில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. நேற்று முன்தினம் அமாவாசை தினத்தில் 12 பேர் மனுத்தாக்கல் செய்தனர். நேற்று புதுச்சேரியில் 3 பேரும், காரைக்காலில் 2 பேரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். புதுச்சேரியில் இன்று (20ம் தேதி) ரம்ஜான் பண்டிகை என்று அரசு விடுமுறை அளித்து, ஏற்கனவே அரசிதழில் வெளியிட்டிருந்தது. இருப்பினும், பிறை தோன்றாததால் நாளை (21ம் தேதி) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என டவுன் காஜியார் அறிவித்துள்ளார். இன்று அரசு அலுவலக நாட்களாகவும், நாளை புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளில் ரம்ஜான் விடுமுறையாகவும் அறிவித்து புதுச்சேரி அரசிதழில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
எனவே இன்று புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பிராந்தியங்களில் அரசு அலுவலகங்கள் திறந்திருந்தன. அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பு மனுத்தாக்கல் சூடுபிடித்தது. கூட்டணி, தொகுதி பங்கீடுகள் முழுமை அடையாவிட்டாலும் தேசிய, மாநில அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் என ஏராளமான வேட்பாளர்கள் ஆர்வமுடன், வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகின்றனர். ஏற்கனவே திமுக, காங்கிரஸ், லஜக மற்றும் சுயேட்சைகள் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் என்ஆர் காங்கிரஸ், பாஜவில் அதிருப்தியில் உள்ளவர்களும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதால் வேட்பு மனுக்களை பெறும் 17 தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் அலுவலகங்களும் பரபரப்புடன் காணப்பட்டன.
நாளையும் நாளை மறுநாளும் விடுமுறை என்பதால் இந்நாட்களில் வேட்பு மனுக்கள் பெறப்படாது என அறிவிக்கப்பட்டு விட்டது. இதனால் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பிராந்தியத்தில் வரும் திங்கள் (23ம் தேதியுடன்) மனுக்தாக்கல் முடிவடையும் நிலையில் இன்னும் 1 நாளே மீதம் உள்ளதால் அனைத்து வேட்பாளர்களுக்கும் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதேவேளையில் மாகே பிராந்தியத்தில் இன்று ரம்ஜான் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் நாளை அங்கு வேட்பு மனுக்கள் பெறப்படும் என தேர்தல் துறை அறிவித்துள்ளது.
இதனிடையே தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களின் மனுவுடன் பல்வேறு முக்கிய ஆவணங்களை சமர்ப்பிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக ஜாதி சான்றிதழ், வரி நிலுவையில்லா சான்று உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை இணைக்க வேண்டும். இவற்றை பெற 5 நாட்களாவது தேவைப்படும் நிலையில் வருகிற 23ம் தேதி ஒருநாள் மட்டுமே மனுதாக்கலுக்கான கால அவகாசமாக உள்ளது. இதனால் சுயேட்சை வேட்பாளர்கள், சான்றிதழ் பெற முடியாமல் பரிதவிக்கும் நிலையை காண முடிகிறது. இதனால் விடுமுறை நாட்களிலும் இந்த சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
3 மாநிலங்களில் முந்துவது யார்?;
புதுச்சேரி, அசாம், கேரளம் ஆகிய சட்டசபைகளுக்கு ஏப்ரல் 9ம்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. முதல் 4 நாட்கள் முடிவில் புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் இதுவரை 11 தொகுதிகளில் 18 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். அதேவேளையில் 140 தொகுதிகளை கொண்டுள்ள கேரளத்தில் 22 தொகுதிகளில் 22 பேரும், 126 தொகுதிகளை கொண்டுள்ள அசாமில் 8 தொகுதிகளில் 12 பேர் வரையில்தான் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். சிறிய மாநிலமான புதுச்சேரியில் இதுவரை அதிக வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்து முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

