தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கிய நிலையில், வரும் பிப்ரவரி 17-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். முன்னதாக வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் இரட்டைப் பதிவு உள்ளவர்கள் என மொத்தம் 97.37 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன. இதனால் 6.41 கோடியாக இருந்த வாக்காளர் எண்ணிக்கை 5.44 கோடியாகக் குறைந்தது.
குறிப்பாக, நிரந்தரமாகக் குடிபெயர்ந்தவர்கள் எனக் கணக்கிடப்பட்ட 66.44 லட்சம் பேர் மீண்டும் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான அவகாசம் கடந்த மாதம் 30-ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், திமுக தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் விடுபட்ட வாக்காளர்களைச் சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த கூடுதல் அவகாசத்தைப் பயன்படுத்திப் பெயர் சேர்க்க இதுவரை லட்சக்கணக்கான விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. இணையவழியாக மட்டும் சுமார் 24.47 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு, அனைத்துத் திருத்தங்களுடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல் வரும் பிப்ரவரி 17-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளது.

