தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி முத்தையம்மால் தெரு பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன். இவர் திட்டங்குளத்தில் தீப்பெட்டி தொழிற்சாலை நடத்தி வருகிறார். இன்று பணியாளர்கள் வழக்கம்போல பணிபுரிந்து கொண்டிருந்தனர். அப்போது தீக்குச்சி தயாரிக்கும் இயந்திரத்தில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதனைப் பார்த்த பணியாளர்கள் அவசரமாக வெளியேறினர்.
மேலும் அவர்கள் கோவில்பட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருந்த போதிலும் பல லட்ச ரூபாய் மதிப்பில் உள்ள இயந்திரம் மற்றும் மூலப் பொருட்கள் சேதமடைந்துள்ளன. தீ விபத்து ஏற்பட்டது குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.