கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் பகுதியை சேர்ந்த வியாபாரி பிரபு (40), இவரது மனைவி மதுமிதா (35), குழந்தைகள் தியா (10), ரிதன் (3), மதுமிதாவின் அப்பா முத்துக்கிருஷ்ணன் (61) ஆகிய ஐந்து பேரும் குடும்பத்துடன் கடந்த 18-ம் தேதி உறவினர் வீட்டு திருமணத்திற்காக டெல்லி சென்றனர்.
அங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு சென்று விட்டு கடந்த 28-ம் தேதி கொல்கத்தா சுற்றுலா சென்றுள்ளனர். சுற்றுலா சென்றவர்கள் கொல்கத்தாவின் தனியார் ஹோட்டலில் தங்கியுள்ளனர்.
29 தேதி இரவு பிரபு, அவரது மனைவி மதுமிதா ஆகிய இருவரும் வெளியே சென்று இருந்த நிலையில், அவர்கள் தங்கியிருந்த ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் மொத்தம் 14 பேர் கருகி இறந்தனர். இதில் பிரபுவின் இரு குழந்தைகள், மாமனார் ஆகியோரும் பலியானார்கள்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் உயிரிழந்தவர்களின் உடல்கள் கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் நேற்று சென்னை கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து 3 ஆம்புலன்ஸ் உதவியுடன் சென்னை விமான நிலையத்திலிருந்து கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் கொண்டு வந்தனர்.
ஊர் மந்தை முன்பு வைக்கப்பட்ட மூவரின் உடல்களை பார்த்து பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சி கரூர் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த இறுதிச் சடங்கு நிகழ்வில் வட்டாட்சியர் குமரேசன் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர் மூவரின் உடல்களும் அங்கு புதைக்கப்பட்டன.
இந்த தீவிபத்து குறித்து பிரபு கூறும்போது, தீவிபத்து நடந்து அரை மணி நேரம் கழித்து தான் தீயணைப்பு வீரர்கள் வந்துஉள்ளனர். அவர்கள் தாமதத்தினால் தான் தீ மேலும் பரவி விட்டது. இந்த உயிர்ப்பலிக்கு காரணம் தீயணைக்கும் படை யின் மெத்தமன் தான் என்றார்.

