கோவை, மலுமிச்சம்பட்டி பகுதியில் கட்டுமானப் பொருட்கள் ஏற்றி வரும் டிப்பர் லாரிகளை ஒரு கும்பல் வழி மறித்து, யூனிட்டுக்கு ரூ. 500 முதல் ரூ. 1,000 வரை சட்ட விரோத வசூலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் கட்டிடப் பணிகளுக்காகச் செங்கல், மணல் மற்றும் ஜல்லி போன்ற பொருட்களைக் கொண்டு செல்ல அரசு முறையாக அனுமதிச் சீட்டு (Pass) வழங்கி வருகிறது. இந்நிலையில், மலுமிச்சம்பட்டி சாலையில் லாரிகளை வழிமறித்த ஒரு கும்பல், “அரசு அனுமதிச் சீட்டு செல்லாது, கூடுதல் ராயல்டி கட்டணம் செலுத்தினால் மட்டுமே லாரிகளை அனுமதிப்போம்” என மிரட்டி உள்ளது.
தங்களது வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில், முறையான ஆவணங்கள் இருந்தும் வழிப்பறி பாணியில் பணம் கேட்பதை அறிந்து ஆத்திரம் அடைந்த லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் அந்தப் பகுதியில் திரண்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கனிமவளத் துறை அதிகாரிகள், லாரிகளில் இருந்த ஆவணங்களைச் சோதித்தனர். அவை அனைத்தும் முறையான அனுமதி பெற்ற சீட்டுகள் என்பதை உறுதி செய்த அதிகாரிகள், லாரிகளை விடுவிக்க உத்தரவிட்டனர்.
இருப்பினும், லாரி உரிமையாளர்கள் அதிகாரிகளிடமும் காவல் துறையினரிடமும் ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டம் முழுவதும் பல இடங்களில் இதேபோல் ‘ராயல்டி’ என்ற பெயரில் ரசீது இன்றி லாரிக்கு 500 முதல் 1000 ரூபாய் வரை மிரட்டிப் பறிக்கின்றனர். இதன் மூலம் தினசரி கோடிக் கணக்கில் முறைகேடு நடக்கிறது.
அரசு அனுமதிச் சீட்டு இருந்தும் எங்களை ஏன் அலைக்கழிக்கிறீர்கள்?” என அவர்கள் அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தனர்.
மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பல்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியதால், மலுமிச்சம்பட்டி பகுதியில் நீண்ட நேரம் பதற்றம் நிலவியது.

