கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கென்யா. அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ரைலா ஒடிங்கா (80). இவர் 2008 முதல் 2013ம் ஆண்டு வரை கென்யாவின் பிரதமராக செயல்பட்டுள்ளார். அவர் 1992 முதல் 2013 வரை லங்காட்டா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக (எம்.பி.) இருந்தார். மேலும் கென்யாவில் நீண்ட காலம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். இதனிடையே, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ரைலா ஒடிங்கா ஆயுர்வேத சிகிச்சை பெற கேரளாவுக்கு வந்துள்ளார். அவர் கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கூத்தாட்டுக்குளத்தில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். அவருடன் அவரது மகள் மற்றும் தனிப்பட்ட மருத்துவரும் இருந்துள்ளனர்.
இந்நிலையில், ரைலா ஒடிங்கா இன்று காலை ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். அவரை மீட்டு உடன் இருந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ரைலா ஒடிங்காவை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். ரைலா ஒடிங்காவின் உடல் கென்யாவுக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

