புதுச்சேரியின் உருளையன்பேட்டை தொகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிநீரில் கழிவுநீர் கலந்தது. இதை குடித்த பலருக்கும் வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல்நலப்பிரச்சினைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதேவேளை, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில் சிலர் உயிரிழந்ததாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். பொதுப்பணித்துறையினர் ஆய்வு செய்ததில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் கலந்தது தெரியவந்தது. இதையடுத்து, உடைப்பை பொதுப்பணித்துறையினர் சரிசெய்தனர். இதனிடையே, நெல்லிக்குப்பம் தொகுதியில் நேற்று முன் தினம் கழிவுநீர் குடிநீருடன் கலந்தது. இதை குடித்து 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதில் சிலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குடிநீரில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக்கோரி முன்னாள் முதல்-மந்திரி நாராயணசாமி புதுச்சேரி கவர்னர் அலுவலகம் முன் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். கவர்னர் அலுவலகம் முன் தரையில் அமர்ந்து நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

