மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த ஆண்டு பதவி ஏற்றதும் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த மாதம் 10ம் தேதி கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் நடந்த விழாவில் மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் நிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அந்த விழாவில் பயனாளிகள் 50 ஆயிரம் பேரின் பெயர் பட்டியல், முகவரி, செல்போன் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய புத்தகத்தையும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விழா மேடையில் முதல்வரிடம் வழங்கினார். இதனை முதல்வர் வெகுவாக பாராட்டினார்.
இந்த 50 ஆயிரம் பேரில் பெரும்பாலானவர்களுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டு விட்டது. இன்னும் சிலருக்கு மின் இணைப்பு வழங்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த பணியை விரைவு படுத்தி 50 ஆயிரம் பேருக்கும் உடனே மின் இணைப்பு அளிப்பதை உறுதி செய்யும் வகையில் இன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.
இந்த கூட்டத்தில் மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி மற்றும்வாரிய இயக்குனர்கள் தலைமை பொறியாளர்கள், உயர் அதிகாரிகள் பங்குபெற்றனர். அத்துடன் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மின்வாரிய பொறியாளர்களும் காணொளி மூலம் தொடர்பு கொள்ளப்பட்டு அந்தந்த மாவட்டங்களில் இன்னும் எத்தனை விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பதை அமைச்சர் கேட்டறிந்தார்.
பெரும்பாலான மாவட்ட பொறியாளர்கள் தங்கள் இலக்கினை பூர்த்தி செய்துவிட்டதாக தெரிவித்தனர். சில மாவட்டங்களில் விரைவில் பணியை முடித்துவிடுவதாக தெரிவித்தனர். 50 ஆயிரம் விவசாயிகளுக்கும் விரைவில் மின் இணைப்பு வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி உத்தரவிட்டு பணியை விரைவுபடுத்தினார்.