பழ வியாபாரிகள் மோதல்- ஒருவர் கைது -ஒருவர் தலைமறைவு
திருச்சி என்.எஸ்.பி ரோடு ரத்னா ஸ்டோர் பகுதியில் கீழ சிந்தாமணி பூசாரி தெருவை சேர்ந்த சரவணன் (வயது 33) என்பவர் கூடையில் வைத்து பழம் வியாபாரம் செய்து வருகிறார்.
அதே பகுதியில் இ.பி.ரோடு காமராஜ் நகர் கருவாட்டு பேட்டையை சேர்ந்த பாலகுமார் (26) என்பவரும் பழம் வியாபாரம் செய்து வந்தார். தொழில் போட்டியில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது இதில் ஆத்திரமடைந்த பாலக்குமார் தனது நண்பர் ராஜேஷ் என்பவருடன் சேர்ந்து சரவணனை தாக்கினார் இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக சரவணன் கோட்டை போலீசில் புகார் செய்தார் .அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாலகுமாரை கைது செய்தனர். ராஜேஷை தேடி வருகின்றனர்.
சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை– காதலன் கைது
திருச்சி தென்னூர் பகுதியைச் சேர்ந்தவர் நவீன் குமார் (வயது 24). இவருக்கும் 15 வயது சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டது.
இதை அறிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர் பின்னர் மகளை கண்டித்தனர்.
மேலும் நவீன் குமாருடன் பேச தடை விதித்தனர். இந்தத நிலையில் நவீன் குமார் அந்த சிறுமியை நைசாக பேசி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். பின்னர் இனாம்தார் தோப்பு பகுதிக்கு அழைத்துச் சென்று அந்த சிறுமியுடன் கட்டாய உறவு கொண்டதாக கூறப்படுகிறது .இது பற்றி சிறுமியின் தாயார் திருவரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் நவீன் குமார் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
சிகிச்சை பெற்று வந்த பெண் திடீர் மாயம்
திருச்சி கருமண்டபம் நட்சத்திர நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி சத்திய பிரியா (42. ) இவருக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து தில்லை நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். கடந்த 21 – ந்தேதி சத்திய பிரியா வீட்டிலிருந்து வெளியே சென்றார் . பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் அவரை தேடிப் பார்த்தனர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது கணவர் ராமகிருஷ்ணன் செசன்ஸ்கோர்ட் போலீசில் புகார் செய்தார் .அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்னி பஸ் மோதி 4 மாத குழந்தை சாவு– தாய், தந்தை படுகாயம்
திருச்சி உறையூர் லிங்கநகர் ஏ.ஆர்.எஸ்.நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கராஜ்.இவரது மகன் அங்குராஜ். (வயது 32).இவரது மனைவி நிவேதா ( வயது 24).இவர்களுக்கு சாராள் என்கிற நான்கு வயது பெண் குழந்தை உள்ளது.அங்கு ராஜ் தனது மனைவி நிவேதா,நான்கு மாத குழந்தை சாராள் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் உறையூர் கோணக்கரை சாலையில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அவ்வழியாக வந்த தனியார் ஆம்னி பஸ் இருசக்கர வாகனம் மீது மோதியது.இதில் நான்கு மாத பெண் குழந்தை சாராள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. கணவன், மனைவி ஆகிய இருவரும் காயம் அடைந்தனர்.இது குறித்து திருச்சி போக்குவரத்து புலனாய்வு பிரிவு வடக்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின் விளக்கை உடைத்து ரகளையில் ஈடுபட்ட கைதி
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது உசேன் (வயது 31). இவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்று கடந்த 2024-ம் ஆண்டு முதல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டதால் , அவரை 5 -வது பிளாக்கில் இருந்து 1-வது பிளாக்கிற்கு மாற்றி உள்ளனர். இதனால் அவர் தன்னை மீண்டும் அதே பிளாக்கிற்கு மாற்றக்கோரி , சிறையில் உள்ள ஒரு டவரின் மீது ஏறி அங்கிருந்த மின்விளக்கை உடைத்து, அந்தக் கண்ணாடியை எடுத்து தன்னை கிழித்துக்கொண்டார். அப்போது அவர் பணியில் இருந்த அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்து விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டி உள்ளார். இதில் அவருக்கு காயம் ஏற்படவே சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து சிறை அதிகாரி வெங்கடசுப்பிரமணி கொடுத்த குமாரின் பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதல் திருமணம் செய்த 3 நாளில் புதுப்பெண் தற்கொலை
திருச்சி கே.கே.நகர் கே.சாத்தனூர் கீழத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (26).
இவரது உறவு பெண் தங்கமணி (23). இவர்கள் இரண்டு பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அந்த பழக்கம் காதலாக மாறியது. பின்னர் கடந்த 20-ந் தேதி கார்த்திக்கும் தங்கமணியும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அந்த குடும்பத்துக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் வருந்திய தங்கமணி தான் அணிந்திருந்த நகைகளை கழற்றி பெற்றோரிடம் வழங்கினார் .பின்னர் வீடு திரும்பிய தங்கமணி யாரும் எதிர்பாராத வகையில் தனது சுடிதார் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். திருமணமான மூன்று நாட்களில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது பற்றி புதுப்பெண்ணின் தந்தை மகாமுனி கே.கே.நகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் உதவி போலீஸ் கமிஷனர் கென்னடி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

