Skip to content

வெடித்து சிதறிய கேஸ் சிலிண்டர் லாரி… அரியலூரில் பரபரப்பு

  • by Authour

அரியலூர் மாவட்டம் வாரணாசி அருகே கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி வளைவில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விழுந்ததில், சிலிண்டர்கள் வெடித்து தீப்பற்றி எரியும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் அரியலூர் நகரை தனியார் கேஸ் ( இன்டோன்) ஏஜென்சி இயங்கி வருகிறது. இந்த ஏஜென்சி கான கேஸ் நிரப்பப்பட்ட சிலிண்டர்கள் திருச்சியில் இருந்து கொண்டு வருவது வழக்கம். கேஸ் சிலிண்டர் ஏற்றி வரும் லாரியின் நிரந்தர ஓட்டுநர் வெளியூர் சென்றுள்ளதால் நேற்று இரவு லோடு ஏற்றப்பட்ட கேஸ் சிலிண்டர் லாரியை
திருச்சி மாவட்டம் இனாம் குளத்தூர் பகுதியைச் சேர்ந்த கனகராஜ் ஓட்டி வந்துள்ளார். இவர் நேற்று இரவு திருச்சி குடோனில் இருந்து, அரியலூரில் உள்ள டீலருக்கு லாரி முழுவதும் கேஸ் நிரப்பப்பட்ட சிலிண்டர்களுடன் அரியலூருக்கு ஏற்றி வந்துள்ளார். இரவு கல்லகம் டோல் பிளாசா கேட் அருகே நிறுத்தி தூங்கிவிட்டு, அதிகாலையில் அங்கிருந்து கிளம்பி அரியலூருக்கு வந்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் வாரணாசி கிராமம் பிள்ளையார் கோவில் அருகே வளைவில் திரும்பும் பொழுது, லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து உள்ளது. இதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் லாரியில் இருந்த சிலிண்டர்கள் வெடித்து சிதற ஆரம்பித்துள்ளது.

காயங்களுடன் லாரி ஓட்டுநர் கனகராஜ் குதித்து தப்பித்துள்ளார். உடனடியாக அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லாரியில் இருந்த மற்ற சிலிண்டர்களும் ஒவ்வொன்றாக வெடித்து தீ பற்றி எரிய ஆரம்பித்தது. ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து வெடித்து சிதறிய கேஸ் சிலிண்டர்களில் சில ராக்கெட் ஏவுகணை போல் எரிந்து கொண்டே வெடித்து அரை கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சிதறி உள்ளது. சுமார் 6 கிலோமீட்டர் சுற்றளவிற்கு கேஸ் சிலிண்டர்கள் வெடித்த சத்தம் மற்றும் அதிர்வு பொதுமக்களுக்கு உணரப்பட்டுள்ளது. லாரி முற்றிலும் எரிந்து உருக்கலைந்தது.
சிலிண்டர்கள் வெடித்து வானில் தீப்பிழம்பு எழுவது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியதால் சுற்றி உள்ள கிராம மக்கள் அனைவரும் சாலையில் நின்று அச்சத்துடன் வேடிக்கை பார்த்தனர்.

அரியலூர் தீயணைப்பு நிலை அலுவலர் செந்தில்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அரியலூர் மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ் பாலசுப்பிரமணிய சாஸ்திரி ஆகியோர் உடனடியாக
அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், பெரம்பலூர், திருமானூர் மற்றும் கீழப்பழுவூர் ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்களை வரவழைத்தனர். நிகழ்விடத்திற்கு வந்த
தீயணைப்பு வீரர்கள் ஏறக்குறைய 3 மணி நேரம் போராடி சிலிண்டர்களை குளிர்வித்தனர். சம்பவ இடத்தில் தரையில் ஏற்பட்ட அதிர்வின் காரணமாக அந்த இடத்தின் அடியில் திருமானூரில் இருந்து அரியலூருக்கு பொதுமக்கள் குடிநீருக்கு செல்லும் தண்ணீர் குழாய் வெடித்து தண்ணீர் மேலே எழும்பியதால் லாரியின் அருகில் கிடந்த சிலிண்டர்களை அந்த தண்ணீர் குளிர்வித்துள்ளது.

தஞ்சாவூர், திருச்சியில் இருந்து அரியலூருக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் வி.கைகாட்டி வழியாக அருகில் ஊருக்கு மாற்று பாதையில் இயக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு அரை கிலோமீட்டர் தூரத்திற்கு போலீசார் தடுப்பு பலன்களை அமைத்து பொதுமக்கள் யாரும் நிகழ்வே இடத்திற்கு செல்லாமல் தடுத்தனர்.
விபத்து நடந்த இடத்திற்கு அருகில் 2 ஓட்டு வீடுகள் மட்டும் இருந்ததால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் இரண்டு விதமான காரணங்கள் சொல்லப்படுகிறது. விபத்து நடந்த இடத்திற்கு அருகில் சிலிண்டர் லாரி வருகை தந்த பொழுது திடீரென சாலையின் குறுக்கே நாய் ஒன்று ஓடி வந்ததால் டிரைவர் பிரேக் அடித்ததால் நிலை தடுமாறி லாரி தலைக்குப்புற தவிர்ந்து சிலிண்டர்கள் ஒன்றோடு ஒன்று உரசி வெடிக்கத் தொடங்கியது எனவும், மற்றொரு தகவல் அரியலூர் கீழப்பளூவூர் இடையே புறவழிச் சாலையில் புதிதாக சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் குறிப்பிட்ட விபத்து நடந்த இடத்தில் இருந்த வேகத்தடை பதாகைகள்நேற்று முன்தினம் இரவு அகற்றப்பட்டுள்ளது. வேகத்தடை பதாகைகள் இல்லாத காரணத்தினால், லாரி அதிவேகமாக வந்து கட்டுப்பாட்டை இழந்து லாரி கவிழ்ந்து விபத்து நடந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து சம்பவ இடத்தில் குளிர்விக்கப்பட்ட எரியாத நிலையில் உள்ள சிலிண்டர்களை அங்கிருந்து அகற்றும் பணியில் கேஸ் சிலிண்டர் நிறுவனம் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் வெடித்து சிதறிய கேஸ் சிலிண்டர் பாகங்களையும் அப்புறப்படுத்தும் பணியையும் செய்து வருகின்றனர். தீ விபத்தில் லாரி முற்றிலும் எரிந்து எலும்பு கூடாக உள்ளது. விபத்து குறித்து கீழப்பலூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!