கடலூர் மாவட்ட புவனகிரி அருகே ஒரு சில இடங்களில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் எண்ணெய் கிணறுகள் உள்ளன. இதில் உளுத்தூர் கிராமத்தில் உள்ள வயல்வெளி பகுதியிலும் ஒரு எண்ணெய் கிணறு உள்ளது. பல மீட்டர் ஆழத்தில் இந்த எண்ணெய் கிணறு அமைக்கப்பட்டு அதிலிருந்து குழாய் மூலமாக எரிவாயு எடுக்கப்பட்டு, புவனகிரி அருகே பெருமாத்தூரில் உள்ள ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு செல்கிறது. பின்னர் அங்கிருந்து காஸ் பிரித்தெடுத்து அனுப்பப்படுகிறது. இந்நிலையில் உளுத்தூர் கிராமத்தில் உள்ள குழாயில் இருந்து நேற்று இரவு திடீரென பயங்கர சத்தம் கேட்டது. பின்னர் அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் அங்கு சென்று பார்த்தபோது நாற்றத்துடன் வாயு கசிவு ஏற்பட்டது தெரிய வந்தது.
பயங்கர சத்தம் மற்றும் காஸ் கசிவு ஏற்பட்டதால் உளுத்தூர் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்து கடும் பீதிக்கு உள்ளாகினர். இதையடுத்து கிராம மக்கள் இந்த சம்பவம் குறித்து மருதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் சேத்தியாத்தோப்பு தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்களும் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போதும் சத்தத்துடன் வாயு கசிவு வெளியேறியபடி இருந்தது. இந்த நேரத்தில் எண்ணெய் கிணறு அருகே பணியில் இருந்த ஊழியர் ஒருவர் உடனடியாக பெருமாத்தூரில் உள்ள ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்தார்.
அங்கு ஓஎன்ஜிசி நிறுவன பணியில் இருந்த ஊழியர்கள் உடனடியாக அங்கிருந்தபடியே இந்த எரிவாயு கசிவை சீரமைத்தனர். இதையடுத்து உளுத்தூர் கிராமத்தில் இருந்த எண்ணெய் கிணற்றில் இருந்த வால்வில் இருந்து வெளியான சத்தமும், வாயு கசிவும் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கியது. இதனால் உளுத்தூர் கிராமத்தில் சுமார் 2 மணி நேரமாக பீதியிலும், பதற்றத்திலும் இருந்த கிராம மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

