கடலூர் செம்மங்குப்பம் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில்மோதியதில் 3 மாணவ, மாணவிகள் இறந்தனர். இவர்களில் சாருமதி(16), செழியன்(15) ஆகியோர் அக்கா, தம்பி ஆவர். இவர்கள் அதே பகுதியை சேர்ந்த திராடமணி என்பவரது குழந்தைகள். ஒரே குடும்பத்தில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே பணியில் மெத்தனமாக இருந்த கேட் கீப்பர் பங்கஜ் சர்மா ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தற்போது அவரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
கேட் மூடப்படவில்லை என்று வேன் டிரைவர் சங்கர் கூறுகிறார், கேட்டை மூடும்போது வேன் டிரைவர், கேட்டை மூடாதே நான் போய்விடுகிறேன் என்றார் என்று கேட் கீப்பர் கூறுகிறார். இது குறித்து போலீசார் விசாரிக்கிறார்கள்.
கேட் மூடப்படவில்லை, ரயில் வரும் சத்தமும் கேட்கவில்லை என வேன் டிரைவர் கூறியதாக பள்ளி தாளாளர் ராஜேந்திரன் கூறி உள்ளார். இந்த விபத்து குறித்து ரயில்வே அமைச்சர் தென்னக ரயில்வே பொதுமேலாளரிடம் விசாரித்து உள்ளார்.