Skip to content

வங்கியில் தங்க நகைகள் திருட்டு: பெண் ஊழியர் கைவரிசை

மராட்டிய மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் உள்ள கல்வா பகுதியில் ஒரு சிறிய கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வந்தது. அங்கு 22 வயது இளம்பெண் ஒருவர் கணக்கு எழுத்தராக பணியாற்றி வந்தார். அந்த பெண் தொடக்கத்தில் வங்கியின் பண பரிவர்த்தனைகள் மற்றும் வாடிக்கையாளர்களின் ஆவணங்களை சரிபார்க்கும் வேலை செய்து வந்துள்ளார்.

இந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் தங்கள் அவசர தேவைகளுக்காக தங்க நகைகளை அடமானம் வைத்து கடன் வாங்குவது வழக்கம். இந்த நகைகள் அனைத்தும் வங்கியின் பாதுகாப்பு லாக்கரில் வைக்கப்பட்டிருக்கும். அந்த பெண் ஊழியர், படி படியாக காசாளர் பொறுப்பிலிருந்து நகைகளை கையாளும் பதவிக்கு வந்தார்.

இந்த நிலையில் யாருக்கும் தெரியாமல் நகைகளை எடுக்க திட்டமிட்டார். அதன்படி கடந்த ஜூன் மற்றும் அக்டோபர் 2025-க்கு இடைப்பட்ட காலத்தில், மூன்று வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்திருந்த தங்க நகைகளை அவர் ரகசியமாகத் திருடினார். இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.5.66 லட்சம். அவர் தனது வேலையை தொடர்ந்துகொண்டே இருந்ததால், ஆரம்பத்தில் யாருக்கும் சந்தேகம் வரவில்லை. பின்னர் அவர் அந்த வேலையிலிருந்து விலகினார்.
சமீபத்தில், அந்த மூன்று வாடிக்கையாளர்களும் தாங்கள் வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பி செலுத்திவிட்டு, தங்கள் நகைகளை திரும்ப பெற வங்கிக்கு வந்தனர். அப்போது வங்கி மேலாளர் லாக்கரை திறந்து பார்த்தபோது, குறிப்பிட்ட அந்த மூன்று பேரின் நகைகளும் காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

வங்கி நிர்வாகம் நடத்திய விசாரணையில், அந்த பெண் ஊழியர் பணியாற்றிய காலத்தில்தான் இந்த நகைகள் மாயமாகியுள்ளது தெரிய வந்தது. இதையடுத்து, கல்வா போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் அந்த பெண் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!